“செயற்கை நுண்ணறிவால் இயங்கும் குற்றப் புலனாய்வு”

“செயற்கை நுண்ணறிவால் இயங்கும் குற்றப் புலனாய்வு”

திருச்சி, சிறுகனூர் எம்.ஏ.எம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியின் நியூட்டன் குளிர்மை அரங்கில், அறிவியல் மற்றும் மனிதநேயத் துறையின் ஏற்பாட்டில் “செயற்கை நுண்ணறிவால் இயங்கும் குற்றப் புலனாய்வு” எனும் தலைப்பில் முன்னாள் கூடுதல் காவல்துறை இயக்குநர் டாக்டர் என்.கே.செந்தாமரை கண்ணன் சொற்பொழிவாற்றினார்.

இந்நிகழ்வில் ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் எஸ். ராஜசேகர் வரவேற்புரை நல்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் எக்ஸ். சுசன் கிறிஸ்டினா விழாவிற்கு தலைமை தாங்கினார். அவர் தம்உரையில் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டால் மருத்துவம், விவசாயம் மற்றும் கோவில்கள் தேவாலயங்களில் நடைபெறும் திருவிழாக்களில் மக்கள் ஒன்று கூடும் போது தொழில் நுட்ப மறைகாணி எனும் சிசிடிவி கேமராக்கள் மூலம் செயற்கை நுண்ணறிவின் வாயிலாக பழைய புகைப்படங்களை வைத்து ஒப்பிடு செய்து குற்றவாளிகளின் ஊடுருவலை எவ்வாறு கண்காணிக்கப்படுகின்றன என்பதை விளக்கினார்.

மேலும் இதுபோன்ற புலன்சார்ந்த நிபுணர்களின் அறிவைப் பயன்படுத்துமாறு மாணவர்களைக் கேட்டுக்கொண்டார். மாஸ்டர் குழுமத்தின் கல்விப்புலத்தலைவர் முனைவர். எஸ். ராஜசேகரன் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த முனைவர் என். சைவராசு அறிவியல் மற்றும் மனிதநேயத்துறைத் தலைவரை பாராட்டினார். மேலும் அடிப்படைகளை வலுப்படுத்துவது முதல் காப்புரிமைகள் பெறுவது வரை குறித்த ஆறு மந்திரங்களை மாணவர்களிடையே எடுத்துரைத்தார்.

மாஸ்டர் குழும நிறுவனங்களின் பதிவாளர் முனைவர் பி. முருகானந்தம் தனது பாராட்டுரையில்.... கல்லூரியில் வழங்கப்படும் தொழில்சார் நிகழ்வுகளைப் பயன்படுத்தி மாணவர்கள் புதுமையாகவும் குறிப்பிட்ட தொழில்திறன்களை மேம்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். கணிதப்பேராசிரியை முனைவர் கே.ஹேமா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். 

சிறப்பு விருந்தினர் டாக்டர் என்.கே. செந்தாமரைக் கண்ணன் தனது சிறப்புரையில்.... திருச்சி நகரத்துடன் தனக்கு இருந்த தொடர்பையும் துறையில் அவர் ஆற்றிய சேவையையும் குறிப்பிட்டார். கணினிகளும் கைப்பேசிகளும் ஏராளமான தகவல்களையும், அறிவையும் உடனுக்குடன் வழங்குகிறது. மாணவர்கள் செய்திகளை அறிந்து கொள்ளாமல் நொண்டிச் சாக்குப் போக்கு சொல்லிச் செல்வதை அனுமதிக்க முடியாது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தை பற்றி விளக்கி தனது உரையைத் தொடங்கினார். நவீன தொழில்நுட்பத்தைப் படித்து அவற்றைப் பயன்படுத்தி அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்திக் கொள்ளுமாறு மாணவர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். 

எதிர்காலத்தில் வேலைவாய்ப்பாக காத்திருக்காமல் தங்களின் திறன்களை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். கடின உழைப்பு தான் எனது மந்திரம் என்பதை கூறி அதையாராலும் மாற்றமுடியாது என்று கூறினார். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் பற்றி விளக்கக்காட்சியைப் பயன்படுத்தி விளக்கினார். இதன் மூலம் வழக்கமான கற்றல் முதல் இயந்திர கற்றல் வரை தனிநபர்களை எவ்வாறு வடிவமைக்கிறது மற்றும் குற்ற விசாரணைகளில் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கூறினார். முடிவில் மாணவர்கள் எதிர்காலத்தில் வயிறு பட்டினியாகமால் இருக்க அறிவுத் தாகத்தை நிரப்ப நிறைய படிக்க வேண்டும். வரலாற்று நிகழ்வுகளையும் செய்தித் தாள்களையும் வாசிக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

உரையாடல் நிகழ்வில் பல மாணவர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அவற்றிற்கு தகுந்த பதிலளித்தார். நிகழ்ச்சியின் முடிவில் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் எஸ். சுரேஷ் நன்றியுரை வழங்கினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision