ஓய்வு பெற்ற பெல் ஊழியர்களை கொண்டு திருச்சி பெல் நிறுவனத்தில் பழுதடைந்த ஆக்ஸிஜன் இயந்திரத்தை இயக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளது - எம்.பி திருச்சி சிவா பேட்டி

ஓய்வு பெற்ற பெல் ஊழியர்களை கொண்டு திருச்சி பெல் நிறுவனத்தில் பழுதடைந்த ஆக்ஸிஜன் இயந்திரத்தை இயக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளது - எம்.பி திருச்சி சிவா பேட்டி

திருச்சி திருவெறும்பூரில் அமைந்துள்ள பெல் நிறுவனத்தில் செயல்பட்டு வந்த ஆக்சிஜன் உற்பத்தியானது 15 ஆண்டுகளுக்கு முன்பாக நிறுத்தப்பட்டது. அங்கு மீண்டும் ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அங்கு செயல்படாமல் இருக்கும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரம் பழுதடைந்ததால் அதை மீண்டும் உற்பத்தி செய்ய முடியாது. ஆகையால் அங்கு புது ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை உருவாக்கலாம் என பெல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று பெல் தொழிற்சாலையின் நிர்வாகிகளை மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா... பெல் நிறுவனத்தில் புதிதாக ஆக்ஸிஜன் ஆலை தொடங்க இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஆகலாம். ஆனால் தற்போது ஆக்ஸிஜன் தேவை மிக அதிகமாக உள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். எனவே திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தில் பணியாற்றிய ஓய்வு பெற்ற ஊழியர்கள் மூன்று பேர் என்னை சந்தித்து அங்கு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியும் என தெரிவித்தனர். அவர்களையும் அழைத்து வந்து பெல் தொழிற்சாலையின் நிர்வாகிகளை சந்தித்தேன்.

முதலில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய சாத்தியமில்லை என தெரிவித்தனர். பின்னர் இந்த சூழலில் காலம் தாழ்த்த கூடாது எனவே முயற்சி செய்து பார்க்கலாம் என கூறினேன் அவர்களும் ஒப்புக்கொண்டுள்ளார்கள். ஓய்வு பெற்ற ஊழியர்கள் முதலில் செயல்படாமல் பழுதடைந்து இருக்கும் அந்த இயந்திரத்தை பார்வையிடுவார்கள் அதன் பின்பு பெல் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் ஒத்துழைப்போடு அதை மீண்டும் இயக்க முயற்சிப்பார்கள். அந்த முயற்சி கை கொடுத்தால் 20 நாட்களில்  மிக குறைந்த செலவில் ஒரு நாளைக்கு 350 சிலிண்டர் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியும். அவர்கள் மூன்று பேரும் ஏற்கனவே அந்த பிரிவில் வேலை செய்துள்ளதால் அவர்களுக்கு அதில் நல்ல அனுபவம் உள்ளது. எனவே அந்த முயற்சி வெற்றி பெறும்.

ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய மத்திய அரசிடமிருந்து ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அதை நான் மத்திய அரசிடம் பேசி பெற்று தருவேன். பெல் நிறுவனத்தில் பழுதடைந்து இருக்கும் ஆக்சிஜனை உற்பத்தி செய்தால் இந்த சூழலில் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார். தடுப்பூசிகளை பிரதமர் மோடி வெளிநாட்டிற்கு விற்று விட்டதால் தான் இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு மாநில உரிமைகளை சரியாக பயன்படுத்தி தடுப்பூசிக்கு சர்வதேச டெண்டர் விடுவது, ஆக்சிஜனை பெறுவது தற்போது ஆக்ஸிஜன், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசி போன்றவற்றை தமிழகத்திலேயே உற்பத்தி செய்யப்படும் என்கிற அறிவிப்பு போன்றவற்றை செய்து வருகிறது என தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK