திருச்சி மாநகராட்சி சாலைகள் - அறப்போர் இயக்கம் தணிக்கை அறிக்கை
அறப்போர் இயக்கம் அரசாங்கத்தில் வெளிப்படைதன்மையும், பொறுப்புடைமையையும் கொண்டு வருவதற்காக பொது மக்களால் நடத்தப்படும் அமைப்பாகும். திருச்சியில் கடந்த சில ஆண்டுகளாக மோசமான சாலைகள் இருப்பதாக பல புகார்கள் எழுந்ததை தொடர்ந்து அறப்போர் இயக்கம் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் அவர்கள் பகுதிகளில் உள்ள மோசமான சாலைகளை ஆவணப்படுத்தும் வேலைகளை செய்தோம்.
இந்த ஆய்வில் சுமார் 50 தன்னார்வலர்கள் கலந்து கொண்டு திருச்சி மாநகராட்சியின் உடனடி கவனம் தேவைப்படும் 200 மோசமான சாலைகளை ஆவணப்படுத்தினர். இன்று இந்த சமுக தணிக்கையின் ஆய்வறிக்கையை அறப்போர் இயக்கம் திருச்சி மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து கொடுத்து ஆய்வறிக்கையை தீவிர கவனத்தில் எடுத்து, மோசமான சாலைகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளோம். திருச்சி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட சாலைகளில் மொத்தம் 199 மோசமான சாலைகள் இந்த சமுக தணிக்கையில் கண்டரியப்ட்டது. இதில் 182 சாலைகள் புதியதாக போடப்படவேண்டும்.
மேலும் 17 சாலைகளுக்கு பேட்ச் வொர்க் (Patch Work) மேற்கொள்ளபட வேண்டும். மண்டல வாரியாக கண்டறியப்பட்ட மோசமான சாலைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் விவரம் கிழே உள்ள அட்டவணையில் உள்ளது. இந்த ஆய்வில் மண்டலம் - 3 : சந்தோஷ் நகர் பகுதியில் 15 ஆண்டுகளாக மக்கள் சாலையில்லாமல் கடும் வேதனைக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல் மண்டலம் - 3 : வார்டு 39 பாலாஜி நகர் பகுதியில் புதிதாக போடப்படும் சாலைகள் எப்படி தரம் இல்லாமல் போடப்படுகிறது என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மண்டலம் - 4 : ராணி மெய்யம்மை நகரில் குண்டு குழியுமான சாலைகளாலும், தெருவிளக்கு இல்லாததாலும் பொதுமக்கள் இரவில் பெரும் இன்னல்களுக்கு ஆளாவதை குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பகுதிகளில் பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சமுக தணிக்கையில் திருச்சி மாநகராட்சியில் போடப்படும் சாலை சம்மந்தமான ஒப்பந்தங்களை ஆய்வு செய்ததில் மேலும் அதிர்சிகரமான தகவல்களே கிடைத்தது. தமிழ்நாடு முழுவதும் சாலை பணிகள் மேற்கொள்ளும் பொது சாலையின் உயரம் அதிகரிக்க கூடாது என்று தலைமை செயலாளரின் கடிதம் இருந்தும் அதை அப்பட்டமா மீறி சாலை உயரம் அதிகரிக்கும் படியான வேலை குறிப்பை ஒப்பந்த ஆவணத்திலேயே திருச்சி மாநகராட்சியில் சில சாலைகளில் தரப்பட்டு உள்ளது.
உதாரணமாக MM Nagar Extn பகுதி பிரதான சாலை அமைக்கும் பணிக்கு கொடுக்கப்பட்ட ஒப்பந்தத்தில் 15 செண்டிமீட்டர் சாலையை தோண்டி 23 செண்டிமீட்டர் புதிய சாலை அமைக்க ஒப்பந்த ஆவணத்திலேயே குறிப்புகள் தரப்பட்டு உள்ளது. இதன் ஒப்பந்த எண் : 2022_MAWS_267090_1.
மேலும் கடந்த செப்டம்பர் முதல் மார்ச் காலகட்டத்தில் போடப்பட்ட சாலை சம்மந்தமான 123 ஒப்பந்தங்களில் ஒப்பந்த பணிகள் துவங்கிய நிலையிலும் சில ஒப்பந்தங்கள் முடிந்த நிலையிலும் கூட இந்த ஒப்பந்தங்களில் பங்கெடுத்த ஒப்பந்ததாரர்களின் விவரங்கள் அரசு இணையதளத்தில் வெளிப்படியாக இல்லை. இந்த டெண்டர்கள் இன்றுவரை திறக்கப்படவே இல்லை என்று உண்மைக்கு புறம்பாக டெண்டர் இணையதளம் காண்பிக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு இந்த விவரங்கள் மறைக்கபடுகின்றன.
மேலும் திருச்சி மாநகராட்சியில் பொது பிரச்சனைகளுக்கு புகார் அளிக்க போதுமான இணையவழி வசதி இல்லை, திருச்சி மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட Trichy_Citizen app செயலியும் முறையாக வேலை செய்யவில்லை. மேற்குறிப்பிட்ட குறைகளின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும், மழைக்காலத்திற்கு முன்னதாக அனைத்து மோசமான சாலைகளையும் துரித நடவடிக்கை எடுத்து சீரமைக்குமாறு திருச்சி மாநகராட்சி ஆணையரை கேட்டுள்ளோம்.
மேலும் விவரமாக ஆய்வறிக்கையை படிக்க கிழே குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் இருந்து ஆய்வரிக்கைளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
Link : https://arappor.in/TrichyCorp_RoadAudit_2023