திருச்சியில் மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தவரை அதிகாரிகள் பிடித்தனர்

திருச்சியில் மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தவரை அதிகாரிகள் பிடித்தனர்

திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஆம்பூர் பகுதியில் மருத்துவம் படிக்காமல் ஒருவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் லட்சுமி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் காமராஜ் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது பகுதியை சேர்ந்த செங்குட்டுவன் (45) என்பவர் அவரது வீட்டில் கிளினிக் வைத்து நீண்ட காலமாக அப்பகுதி மக்களுக்கு ஆங்கில முறையில் சிகிச்சை அளித்து வருவது தெரியவந்தது. பின்னர் செங்கோடன் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் கிளினிக் அங்கிருந்த சான்றிதழ்களை ஆய்வு செய்தனர்.

இதில் மருத்துவ படிப்பு படிக்காமல் மத்திய அரசின் திறன் வளர்ச்சி மேம்பாடு திட்டத்தின் பெறப்பட்ட சான்றிதழ்கள் அடிப்படையில் கிளினிக் வைத்து டாக்டர் தொழில் செய்தது தெரியவந்தது. பின்னர் அவரது சான்றிதழ்கள், கிளினிக்கில் உள்ள மருந்து மற்றும் சிகிச்சை உபகரணங்கள் கைப்பற்றினர். பின்னர் திருச்சிக்கு அழைத்து வரப்பட்ட செங்குட்டுவனிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அவர் வைத்திருந்த சான்றிதழ்கள் உண்மை தன்மை குறித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திறன் வளர்ச்சி மேம்பாட்டு துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான முடிவுகள் வந்த பிறகுதான் செங்குட்டுவன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve