திருச்சியில் சிறைக்காவலர் பயிற்சி நிறைவு
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறைக்காவலர் பயிற்சி பள்ளியில் 6 மாதகால அடிப்படை பயிற்சி (02.08.2023) அன்று முதல் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சியில் 132 ஆண் இரண்டாம் நிலை பயிற்சி காவலர்களும், 08 பெண் இரண்டாம் நிலை பயிற்சி காவலர்களும் மொத்தம் 140 இரண்டாம் நிலை. பயிற்சி காவலர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இப்பயிற்சி பள்ளியில் சட்ட வகுப்புகள், சிறை நடைமுறை நூல், இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை முறைச்சட்டம், இந்திய சாட்சிய சட்டம், குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய சட்ட வகுப்புகள் முறைப்படி சட்ட பயிற்றுநர்களால் பயிற்றுவிக்கப்பட்டது.
மேலும் கவாத்து பயிற்சி, உடற்பயிற்சி, சிலம்பம், கராத்தே, முதலுதவி, பேரிடர் மேலாண்மை, தீ தடுப்பு முறை, வெடி பொருள் கண்டுபிடித்தல் மற்றும் செயலிழக்க செய்தல், கண்ணீர் புகைக்குண்டு வீச்சு, மோப்ப நாய், தடய அறிவியல், தடை செய்யப்பட்ட பொருள்கள் சிறையின் உள்ளே ஊடுருவாமல் இருக்க சிறப்பு சோதனை பயிற்சி, நவீன சோதனை கருவிகள் பயன்படுத்துதல், துப்பாக்கி சுடுதல், யோகா மற்றும் தியானம் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலும், எய்ட்ஸ் விழிப்புணர்வு, தனிமனித ஆளுமை, தகவல் தொடர்பு திறன், மன அழுத்த மேலாண்மை, சைபர் கிரைம், தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005, சிறந்த சிறை நிர்வாகம், சிறப்பு சோதனை, ஊக்குவித்தல், அரசு ஊழியர் நடத்தை விதிகள் ஆகிய வகுப்புகள் பயிற்றுவிக்கப்பட்டது.
திருச்சி மத்திய சிறை, திருச்சி மகளிர் தனிச்சிறை, திருச்சி கூர்நோக்கு இல்லம், பொன்மலை காவல் நிலையம் ஆகிய இடங்களுக்கு பயிற்சி காவலர்கள் அழைத்து செல்லப்பட்டு களப்பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சி காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள கவாத்து திடலில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை அமைச்சர் ரகுபதி தலைமையேற்று வாழ்த்துரை வழங்கினார். தலைமை இயக்குநர், சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைவர் மஹேஸ்வர் தயாள், வரவேற்புரை வழங்கினார். காவல்துறையை சார்ந்த உயர்அலுவலர்கள், சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறையை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர், படை பரிவாரங்களை ஆய்வு செய்தல், அணிவகுப்பு மரியாதையை ஏற்றல், தேசிய கொடி, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை கொடிகளை ஏந்திய அணி படைப்பிரிவினரை சென்றடைதல், பயிற்சி காவலர்களின் உறுதி மொழி ஏற்பு, சிறப்பான திறமை கொண்ட பயிற்சி காவலர்களுக்கு அமைச்சர் பதக்கம் வழங்கினார். இதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இக்கலை நிகழ்ச்சியில் ஆண் மற்றும் பெண் இரண்டாம் நிலை பயிற்சி காவலர்கள், தாங்கள் இப்பயிற்சி பள்ளியில் கற்றுக்கொண்ட தற்காப்பு கலையான கராத்தே மற்றும் சிலம்பம் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினர்.