பணி நீக்கம் செய்யப்பட்ட பெல் மருத்துவமனை ஒப்பந்த மருத்துவ ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணா
திருச்சி திருவெறும்பூர் பெல் நிறுவன வளாகத்தில் பெல் நிறுவன ஊழியர்களுக்காக பெல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தனியார் நிறுவன ஒப்பந்த அடிப்படையில் 160 மருத்து ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.
இவர்களுக்கு நான்கு மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் உள்ளே பணியின் போது தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக ஒப்பந்த மருத்துவ ஊழியர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினார்.
மேலும் இது குறித்து பெல் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பெல் நிறுவனம் மற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதில் இரண்டு மருத்துவ பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு ஆதரவு தெரிவித்து மீதமுள்ள ஒப்பந்த மருத்துவ பணியாளர்கள் போராடிய போது 16 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இது குறித்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த மருத்துவ பணியாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க , நிலுவையில் உள்ள சம்பளத் தொகையை வழங்க கோரியும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு பெல் நிர்வாகம் மற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனம் எந்த பதிலும் அளிக்காத நிலையில், இன்று பணி நீக்கம் செய்யப்பட்ட 16 ஒப்பந்த மருத்துவ ஊழியர்கள் பெல் வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது
பெல் நிர்வாகம் மற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும் கையில் பதாகைகளை ஏந்தியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பெல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், வாக்கு ஏற்பட்டது. தொடர்ந்து உடன்பாடு எட்டப்படாத நிலையில் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த மருத்துவ ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn