கால்நடைகளுக்கு நோய் தாக்காமல் இருக்க மாவட்ட ஆட்சியரின் புதிய யோசனை
கால்நடைகளைத் தாக்கும் தோல் கழலை நோய் எனப்படும் (Lumpy Skin Disease) நோயினை கட்டுப்படுத்தும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்வது தொடர்பாக கீழ்காணும் ஆலோசனைகளை பின்பற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தோல் கழலை நோய் மாட்டினங்களைத் தாக்கும் பெரியம்மை போன்ற ஒரு நச்சுயிரி நோய் ஆகும். நோய் பாதித்த மாடுகளில் அதிக காய்ச்சல், சோர்வு, நிணநீர் சுரப்பி வீக்கம் மற்றும் தோல்களில் தலை, கழுத்து, கால்கள், மடி மற்றும் இனப்பெருக்க உறுப்புகளில் 2 முதல் 5 செ.மீ. அளவுள்ள அம்மை கொப்புளங்கள் தென்படும். சில கொப்புளங்கள் சீல் படிந்து புண்களாகி புழுக்கள் வர வாய்ப்புண்டு.
இந்த நோயானது கொசு, உண்ணி, ஈக்கள் மற்றும் கடிக்கும் பூச்சிகள் மூலம் பரவக்கூடியது. பாதிக்கப்பட்ட மாடுகளிலிருந்து மற்ற மாடுகளுக்கு எச்சம் இரத்தம் கொப்புளங்கள் மற்றும் விந்தணுக்கள் மூலம் விரைவாக பரவக்கூடியது. ஆகவே, நோய் பாதித்த மாடுகளை பிற மாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தி கிருமிநாசினி கொண்டு கொட்டகையை சுத்தமாகவும், காற்றோட்டமாகவும், சூரியஒளி படுமாறும் பராமரிக்க வேண்டும். மேலும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
தங்கள் கால்நடைகள் கட்டும் இடங்களில் மாலை 06.00 மணியளவில் நொச்சி இலை சருகுகள், வேப்பிலை சருகுகளை கொண்டு புகைப்பிடித்தால் கால்நடைகளை தாக்கும் கொசுக்களை கட்டுப்படுத்திட முடியும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO