களை கட்டும் கள்ள லாட்டரி விற்பனை - கண்டும் காணாத காவல்துறை

களை கட்டும் கள்ள லாட்டரி விற்பனை - கண்டும் காணாத காவல்துறை

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி மற்றும் வெளி மாநில லாட்டரி விற்பனை திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் ஆகிய பகுதிகளில் படுஜோராக நடந்து கொண்டிருக்கிறது. இது பற்றி துறையூர் மற்றும் உப்பிலியபுரம் போலீசாருக்கு தகவல் தெரிந்தும் கண்டுகொள்ளாமல் மாதாமாதம் மாமூல் பெற்றுக் கொண்டு கள்ள லாட்டரி விற்பனையை துறையூர் மற்றும் உப்பிலியபுரம் பகுதிகளில் செயல்பட அனுமதித்து உள்ளனர் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, லாட்டரி விற்பனையை தடை செய்தார். இந்த நிலையில் தற்போது வெளி மாநில லாட்டரியான கேரளா லாட்டரி அதிலிருந்து மூன்று இலக்க எண்களை கொண்ட லாட்டரி டிக்கெட் என போலியாக துறையூர் மற்றும் உப்பிலியபுரம் பகுதிகளில் ஒரு சிலர் அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் சுரண்டி இலட்சக்கணக்கில் லாபம் பார்த்து வருகின்றனர். இது பற்றி சமூக ஆர்வலர்கள் காவல்துறைக்கு தகவல்கள் தெரிவித்தும் துறையூர் மற்றும் உப்பிலியபுரம் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளித்தும் கள்ள லாட்டரி விற்பனையாளர்களிடம் இருந்து மாதம் ஒருமுறை மாமூல் பெற்றுக் கொண்டு கள்ள லாட்டரி விற்பனையை கனஜோராக நடத்துவதற்கு மறைமுகமாக காவல்துறையே அனுமதித்துள்ளது வேதனையை தருவதாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

துறையூர் பகுதியிலிருந்து முசிறி செல்லும் வழியில் நல்லதண்ணீர் பிடிக்கும் இடத்திலிருந்து கீழே இறங்கி செல்லும் பாதையில் மயானத்திற்கு அருகில் உள்ள கொட்டகையில் வெட்ட வெளிச்சமாக கள்ள லாட்டரி விற்பனை படுஜோராக நடந்து கொண்டிருக்கிறது. இதில் கூலி தொழிலாளர்கள் ஆட்டோ டிரைவர்கள், வேன், மினி பேருந்து ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலரும் அன்றாடம் தான் வாங்கும் தினக்கூலியை இவர்களிடம் கொண்டு வந்து பேராசையின் காரணமாக கள்ள லாட்டரியால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.

துறையூர் பெரிய கடையை வீதி நல்ல வாண்டு சந்து சிலோன் ஆஃபீஸ், பாலக்கரை, பெருமாள் கோவில் வீதி, ஆத்தூர் ரோடு உள்ளிட்ட இடங்களிலும், உப்பிலியபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் பிரபலமான இடங்களில் தனி கடை அமைத்து வெட்ட வெளிச்சமாகவே கள்ள லாட்டரி நம்பரை எழுதிக் கொடுத்து பல அப்பாவி மக்களின் வாழ்வாதாரத்தை சுரண்டி லட்சக்கணக்கில் லாபம் பார்த்து வருகின்றனர். 

இதன் மூலம் அதில் ஒரு பகுதியை காவல் துறையில் மாதா மாதம் மாமூல் கொடுத்து வருவதாகவும், இதன் காரணமாக போலீசார் அவர்களை கண்டும் காணாமல் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. கள்ள லாட்டரி விற்பனையாளர்கள் செல்போன் மூலம் நம்பர்களை கூறிக்கொண்டும் அவர்கள் இருக்கின்ற இடத்திற்கே வாடிக்கையாளர்களாக அப்பாவி கூலி தொழிலாளர்களை வரவழைத்து அவர்களிடம் போலியாக நம்பரை எழுதி கொடுத்து மதியம் மூன்று மணிக்கு ரிசல்ட் தெரிய வரும் என்று சொல்லி தினந்தோறும் ஆயிரக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு கள்ளத்தனமாக லாட்டரி விற்பனையை செய்து வருகின்றனர்.

இதில் காவல் துறைக்கு மட்டும் மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வரையில் மாமூல் தருவதாக கூறப்படுகிறது மேலும் இந்த கள்ள லாட்டரியால் பல குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும், இதனை உடனடியாக காவல்துறை உயரதிகாரிகள் தனிப்படை அமைத்துகள்ள லாட்டரி விற்பனையை வேரோடு ஒழித்து கட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision