அடகு வைக்கப்பட்ட தங்க நகை போலி - சிறைபிடிக்கப்பட்ட பெண்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மேல சீதேவிமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் முருகன் - மணிமேகலை தம்பதியினர். முருகன் சொந்தமாக வாடகை ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். மணிமேகலை கூலி வேலை செய்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மண்ணச்சநல்லூர் எஸ்.பி.ஐ வங்கி கிளையில் மணிமேகலை தனது 13 பவுன் தங்க நகையை நகை கடன் பெற்றுள்ளார்.
தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நகை கடனை புதுப்பித்து வந்த மணிமேகலை இந்த வருடமும் நகை கடனை புதுப்பிப்பதற்காக வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது மணிமேகலையின் நகைகளை நகை மதிப்பீட்டாளர் பரிசோதனை செய்தபோது, அவர் கொடுத்த நகைகளில் 7 பவுன் போலி எனவும், உடனடியாக 3 லட்சத்து 88 ஆயிரம் நகை கடனை செலுத்திவிட்டு செல்லுமாறும் கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து மணிமேகலையை வங்கிக்குள் சிறைப்பிடித்த வங்கி ஊழியர்கள் போலீசாரிடம் தகவல் சொல்லாமல் மணிமேகலையை இரவு வரை விசாரித்துள்ளனர்.
இதற்கிடையில் இதுகுறித்து தகவலறிந்த மணிமேகலையின் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வங்கி முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்த்து வந்த திருச்சியை சேர்ந்த ஈஸ்வரமுத்து என்பவர் பல வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் போலி நகைகளை வைத்து மோசடி செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.