கல்லணைக்கு அருகே காவிரியின் குறுக்கே புதிய கதவணை - அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

கல்லணைக்கு அருகே காவிரியின் குறுக்கே புதிய கதவணை - அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில், காட்டூர் பாலாஜி நகரில், தனியார் (சிங்கார) மஹாலில் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில்... திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணை உடைந்தபின்பு, அங்கு புதிய கதவணை கட்டிவருகிறோம். அது போன்ற நிலை ஏற்படுவதற்கு முன்பாக, காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணைக்கு அருகில் புதிய கதவணை அமைப்பதற்காக, தமிழ்நாட்டின் முதல்வருடன் பேசி வருகிறோம்.

திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியில் இரண்டு பெரிய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அதில் L&T நிறுவனம் தனக்கான பணிகளை நிறைவு செய்யும் நிலைக்கு வந்துவிட்டது. அதிமுகவைச் சேர்ந்த அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இசக்கி சுப்பையா எடுத்துள்ள பணிகளை இன்னும் முடித்து தரவில்லை. இதனால் அரியமங்கலம் முதல் திருவெறும்பூர் வரை சாலை அமைத்துக்கொடுக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் விரைந்து முடித்து தரப்படும்.

திருச்சி மாநகராட்சியில் தஞ்சை - புதுக்கோட்டை - மதுரை - கரூர் - சென்னை ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளை இணைப்பதற்கான அரைவட்ட சுற்றுச்சாலை விரைவில் அமைத்து தரப்படும். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. நத்தம் புரம்போக்கில் குடியிருப்பவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்கப்படும். 50 ஆண்டுகளுக்கு மேலாக குளம் ஓடை இவற்றில் குடியிருப்பவர்களுக்கு, அதற்கான சட்டத்தை பயன்படுத்தி பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கே.என்.நேரு பேசினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn