குரூப் ரத்து - தலைமை ஆசிரியர் அலுவலகத்தை முற்றுகை
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவிகள் தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் பதினொன்றாம் வகுப்பு 12ஆம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வியில் பயிற்றுவித்த வணிகவியல் குரூப் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டதால் மாணவிகளின் நிலை குறித்து பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் கேள்வி எழுப்பினர்.
மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மீண்டும் பதினொன்றாம் வகுப்பில் வணிகவியல் குரூப் தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை மனு விடுத்தனர். இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து தற்பொழுது 11ம் வகுப்பிற்கான அட்மிஷன் நடைபெற்று வருகிறது.
இதில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவிகள் தங்களது மேற்படிப்பு தொடர விண்ணப்பித்து வருகின்றனர். ஆங்கில வழிக் கல்வியில் பதினொன்றாம் வகுப்பிற்காக இருந்த வணிகவியல் பாட பிரிவானது இந்த ஆண்டு வகுப்பறை கட்டிடம் மற்றும் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் ரத்து செய்யப்படுவதாக தலைமை ஆசிரியர் பெற்றோர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த பெற்றோர்கள் இன்று பள்ளி தலைமை ஆசிரியர் அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகையிட்டனர். அப்போது தலைமையாசிரியர் தங்களிடம் போதுமான ஆசிரியர்கள் மற்றும் வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால் ஆங்கில வழி வணிகவியல் குரூப் ரத்து செய்யப்பட்டதாகவும், இந்த ஆண்டு குரூப் தொடர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர்களும் மாணவிகளும் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
இது குறித்து பெற்றோர் ஒருவர் கூறுகையில் தங்களது பிள்ளைகள் ஆறாம் வகுப்பு முதல் ஆங்கில வழிக் கல்வியில் இந்த பள்ளியில் பயின்று வந்தனர் தற்பொழுது பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்றாம் வகுப்பு செல்லும்போது வணிகவியல் ஆங்கில வழிக் கல்வி குரூப் ரத்து செய்யப்பட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருவதாகவும், தொடர்ந்து இந்த பள்ளியில் மீண்டும் வணிகவியல் ஆங்கில வழிக் கல்வி குரூப் தொடர வேண்டும் அதற்கான நடவடிக்கைகள் அரசு அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு பதினொன்றாம், பனிரெண்டாம் வகுப்பில் ஆங்கில கல்வி ரத்து செய்யப்பட்டதை கண்டித்து பெற்றோர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி மீண்டும் 11ஆம் வகுப்பில் ஆங்கில கல்வியை போராடி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn