சிலைகள் சிலருக்கு வயிற்றெரிச்சல்- அதற்காக சிலைகளை திறப்பதில்லை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சிலைகள்  சிலருக்கு வயிற்றெரிச்சல்- அதற்காக சிலைகளை திறப்பதில்லை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி திமுக தெற்கு மாவட்டம் சார்பில் டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் 8 அடி உயரமுள்ள கலைஞரின் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டது. அந்த சிலையை விளையாட்டுத்துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அந்த நிகழ்வில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே. என் நேரு பேசுகையில் 1996 ஆம் ஆண்டில் திருச்சியில் திமுகவின் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டையொட்டி நடைபெற்ற ஊர்வலத்தை கலைஞர் டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் இந்த இடத்தில் நின்று தான் பார்த்தார். அந்த இடத்தில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டிருப்பது பெருமைக்குரிய அம்சமாக உள்ளது என்றார்.

 சிலையை திறந்து வைத்த பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், சேலம் மாநாட்டை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைவருக்கும் எனது நன்றி.மாநாட்டை வெற்றி மாநாடாக நடத்தி காட்டிய அமைச்சர் கே.என். நேருவிற்கு நன்றி.கே என் நேருவின் உழைப்பை பார்த்து நான் வியந்து போகிறேன்.கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தி.மு.க தெற்கு மாவட்டம் சார்பில் 100 நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டு இதுவரை 76 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. திருச்சி தெற்கு மாவட்டம் முதன்மையாக உள்ளது. திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் விளையாட்டு போட்டிகள், கலைஞர் சிலை திறப்பு விழா, அணிகளுக்கான ஆலோசனைக் கூட்டங்கள்,  மருத்துவ முகாம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களுக்கு முன் உதாரணமாக திருச்சி தெற்கு மாவட்டம் விளங்குகிறது.அதற்கு தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர்அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 திருச்சியில் கலைஞர் சிலையை திறந்தது எனக்கு பெருமையாக உள்ளது. கலைஞரை முதன் முதலில் சட்டமன்ற உறுப்பினராக்கிய மாவட்டம் திருச்சி மாவட்டம் தான். இப்போதைய ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் இருந்த குளித்தலை தொகுதியில் இருந்து தான் சட்டமன்ற உறுப்பினராக முதன் முதலாக கலைஞர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் கலைஞர் வெற்றி பெற்றார். கலைஞருக்கு மனதிற்கு நெருக்கமான மாவட்டமாக திருச்சி விளங்கியது. மொழிப்போர் தியாகி சின்னச்சாமி திருச்சி ரயில் நிலையத்தில் தீக்குளித்து தமிழுக்காக தனது உயிரை அர்ப்பணித்தவர். அவருடைய நினைவு நாளை தான் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளாக நாம் கடைபிடித்து வருகிறோம். அந்த நாளில் காலம் முழுக்க இந்தி திணிப்புக்கு எதிராக இருந்த, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்த கலைஞருக்கு சிலை திறந்து இருப்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. பெரியார் ,அண்ணா,கலைஞர் சிலைகள் சிலருக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்துகிறது.

அவர்கள் வயிற்றெரிச்சல் அடைய வேண்டும் என்பதற்காக நாம் சிலைகளை திறப்பதில்லை மாறாக தமிழ்நாடு இந்த அளவிற்கு முன்னேறி உள்ளது என்றால் அதற்கு காரணம் அந்த தலைவர்கள் தான் அதற்கு நன்றி உணர்ச்சியாகவே நாம் அவர்களின் சிலைகளை திறக்கிறோம். திமுக தேர்தலில் போட்டியிடலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்த இடம் திருச்சி தான். அந்த திருச்சியில் தற்பொழுது கலைஞருக்கு சிலையை திறக்கப்பட்டுள்ளது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 ம் வெற்றி பெற வேண்டும்.அதற்காக ஒவ்வொருவரும் உழைத்திட வேண்டும் இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்ய கலைஞரின் சிலையிலிருந்து உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision