திருச்சியில் அறிவுசார் மையங்கள் இன்று காணொளி காட்சி மூலம் திறப்பு

திருச்சியில் அறிவுசார் மையங்கள் இன்று காணொளி காட்சி மூலம் திறப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கும் துறையின் கீழ் செயல்படும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பிலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பிலும் நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகத்தின் சார்பிலும் முடிவுற்ற பணிகளை காணொளி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.

அந்த வகையில் திருச்சி பாலக்கரை மற்றும் குதுபாபள்ளம்,மணப்பாறை,துறையூர் மாவட்டத்தில் 4 அறிவுசார் மையங்கள் ரூ 7.34 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். திருச்சி 53-வது வார்டில் குதுபாபள்ளத்தில் தரைத்தளம், முதல் தளம் என 7843 சதுர அடியில் நூலகத்துடன் கூடிய அறிவு சார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கண்காணிப்பு கேமரா, கட்டுப்பாட்டு அறை, பாதுகாப்பு அறை, புத்தக அலமாரிகள், கழிவறைகள், வாகனம் நிறுத்தும் இடம், படிப்பக இருக்கைகள், தகவல் மையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக காந்தியடிகள், பாரதியார், திருவள்ளுவர், அப்துல்கலாம், அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தேச தலைவர்களின் படங்களும் வைக்கப்பட்டுள்ளன.

 இதேபோல் 7843 சதுர அடியில் நவீன வசதிகளுடன் நூலகத்துடன் கூடிய அறிவு சார் மையம் பாலக்கரை 50 -வது வார்டிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்கள் பசுமை கட்டிடம் அமைப்புடன் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வகையில் கட்டப்பட்டு, அதிக காற்றோட்ட வசதி, அதிக சூரிய வெளிச்சம் மற்றும் கட்டிடத்திற்குள் சூரிய வெளிச்சம் அதிகமாக புகாதவகையில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இம்மையங்கள் மூலம் ஏழை ,எளிய பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி செல்லும் இளைஞர்கள், மகளிர்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் மிகுந்த பயனடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி அறிவு சார் நூலகத்தை பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், நகரப் பொறியாளர் சிவபாதம்,மண்டல குழு தலைவர்கள் துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன், மாமன்ற உறுப்பினர்கள் கலைச்செல்வி, கமால் முஸ்தபா, விஜயா ஜெயராஜ், உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்...

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision