திருச்சியில் ஆசிரியர் தாக்கியதில் மாணவனின் மூளையில் பாதிப்பா? அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
திருச்சி காஜாமலையைச் சேர்ந்த இக்பால், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், பால் வியாபாரம் செய்து கிடைக்கும் வருமானத்தில் எனது குடும்பத்தை நடத்தி வருகிறேன். என் மகன் இந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த செப்டம்பர் மாதம் பள்ளி சென்று திரும்பிய எனது மகனின் உடலில் காயங்கள் இருந்தன. விசாரித்த போது, தேர்வில் குறைந்த மதிப் பெண் எடுத்ததால் ஆசிரியர் தாக்கியதாக கூறினான். இதற்காக மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தோம்.
ஆனால் ஆசிரியர் அடித்ததால் பயந்த நிலையில் இருந்த எனது மகனை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவனின் மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அவனுக்கு சிகிச்சை அளிக்க பல லட்சம் ரூபாய் செலவு செய்துவிட்டோம். தொடர்ந்து சிகிச்சைக்கு கட்டணம் செலுத்த வசதி இல்லை. எனவே ஆசிரியர் தாக்கியதில் எனது மகனின் மூளை பாதித்ததற்காக உரிய இழப்பீடு வழங்கவும்,
சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த வழக்கு குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டார்.