பேருந்து வசதி கேட்டு கடிதம் எழுதிய ஏழாம் வகுப்பு மாணவனுக்கு நீதிபதி பாராட்டு

பேருந்து வசதி கேட்டு கடிதம் எழுதிய ஏழாம் வகுப்பு மாணவனுக்கு நீதிபதி பாராட்டு

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த பெருமாள் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். பள்ளி நேரத்தில் நரசிங்கபுரம் வழியாக அரசு பேருந்தும் ஒட்டம்பட்டி வழியாக நரசிங்கபுரம் வந்து செல்லும் வகையில் அரசு பேருந்து இயக்கப்பட்டது. இந்நிலையில் ஒட்டம்பட்டி கிராமத்தில் உள்ள பாலம் உடைந்ததால் அவ்வழியாக நரசிங்கபுரம் வர வேண்டிய பேருந்து நிறுத்தப்பட்டு வேறு மார்க்கத்தில் திருப்பி விடப்பட்டது.

இதனால் அப்பகுதி மாணவர்கள் கடும் சிரமம் அடைந்தனர் இதுகுறித்து நரசிங்கபுரத்தைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் மோனிஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு துறையூர் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி அனுப்பினார்.

இதனை தொடர்ந்து நீதிபதி ஜெய்சங்கர் துறையூர் அரசு பேருந்துகளை கழகத்தை தொடர்பு கொண்டு பள்ளி நேரத்தில் நரசிங்கபுரம் வழித்தடத்தில் காலையும், மாலையும் கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் சமூக பொறுப்புணர்வுடன் கடிதம் எழுதிய மாணவனை பாராட்ட எண்ணிய நீதிபதி ஜெய்சங்கர் திடீரென்று பெருமாள் பாளையம் அரசுப் பள்ளிக்கு சென்றால் அங்கு மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் பரிசு வழங்கி பாராட்டினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO