மணப்பாறையில் சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த தம்பதி

மணப்பாறையில் சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த தம்பதி

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை வெள்ளிக்கிழமை இரவு காவல்நிலையத்தில் ஒப்படைத்த தம்பதியினருக்கு பொதுமக்களிடம் பாராட்டு குவிந்து வருகிறது.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அடுத்த நாகமங்கலத்தை சேர்ந்தவர் ஜம்புலிங்கம் மகன் குஞ்சுபிள்ளை(60). இவர் அப்பகுதியில் இருச்சக்கர வாகன விற்பனை முகவராக இருந்து வருகிறார். மணப்பாறையில் திருச்சி சாலையில் உள்ள இருச்சக்கர வாகன விற்பனை நிலையத்தில் வாகனங்களை வாங்க வெள்ளிக்கிழமை பிற்பகலில் வந்தவர் ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை ஊதா நிற பையில் வைத்து கையில் கொண்டு வந்துள்ளார்.

அப்போது பணம் சாலையில் தவறி விழுந்துள்ளது. எங்கு தேடியும் கிடைக்கவில்லையாம். இதுகுறித்து முதியவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், குமரப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜீவ்காந்தி (39) – புவனேஸ்வரி தம்பதியினர் சாலையில் கிடந்ததாக ரூ.50 ஆயிரம் ரொக்கத்துடன் ஊதா நிற பையினை இரவு மணப்பாறை காவல்நிலையம் நேரில் சென்று காவல் ஆய்வாளர் கருணாகரனிடம் ஒப்படைத்தனர். போலீஸார் விசாரணையில் அந்த தொகை முதியவர் குஞ்சுபிள்ளையது என்பது உறுதியானது.

அதனைத்தொடர்ந்து முதியவர் குஞ்சுபிள்ளை காவல்நிலையம் வரவழைக்கப்பட்டு சாலையில் விடப்பட்ட ரொக்கம் ராஜீவ்காந்தி(39) – புவனேஸ்வரி தம்பதியினரால் காவல்துறையினர் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. வறுமையிலும் நேர்மையை கொண்ட தம்பதியினர், காவல்துறை சார்பில் பாராட்டி பொன்னாடை போர்த்தி, இனிப்புகள் வழங்கி கவுரப்படுத்தப்பட்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision