திருச்சியில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் - பொதுமக்கள் அச்சம்
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் கணிசமாக குறைந்துள்ள நிலையில், டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. திருச்சி மாநகரில் மட்டும் நிகழாண்டில் இதுவரை 230-க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். தொடர் மழையால் திருச்சி மாவட்டத்தில் நீர்நிலைகளில் மழைநீர் நிரம்பியுள்ள நிலையில், காலி மனைகளில் தேங்கும் மழைநீரை அப்புறப்படுத்தாதது உள்ளிட்ட காரணங்களால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவ முக்கிய காரணமாக உள்ளது.
மேலும், இதைக் கண்காணித்து டெங்கு கொசு உற்பத்தி ஆதாரங்களை அகற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத் துறை சுணக்கமாக உள்ளது. இதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நவம்பர் 1-ம் தேதி முதல் நேற்று முன்தினம் (10.11.2021) வரை கடந்த 10 நாட்களில் திருச்சி மாவட்டத்தில் 75-க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், கணிசமானோர் மாநகரில் வசிப்பவர்களாக உள்ளனர். எனவே, திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் கட்டுப்படுத்தும் வகையில் காய்ச்சல் முகாம்களை நடத்தி, டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஒரு நாளைக்கு 36 - 38 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கைககள் மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மழைக் காலமாதலால் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கின்றது, எனினும் நிலைமை கட்டுக்குள் தான் உள்ளது என்று மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn