சேற்றில் கும்மாள குளியல் போட்ட அகிலா
திருச்சி திருவானைக்கோவிலில் ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோவில் உள்ளது. சிவனின் பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலாமாக விளங்கும் இந்த கோவிலில், அகிலா என்ற பெண் யானை கடந்த 11 வருடங்களாக இறைப்பணி செய்து வருகிறது.
யானை அகிலா குளிப்பதற்காக கோவில் வளாகத்தில் உள்ள நாச்சியார் தோப்பு பகுதியில் 20 அடி நீளம், 6 அடி அகலம் மற்றும் 6 அடி ஆழத்திற்கு குளியல் குளம் அமைக்கப்பட்டு, கடந்தாண்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதில் யானை நாள்தோறும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்து வருகிறது.
இந்தநிலையில், வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரிலும், இந்து சமய அறநிலையத் துறையின் அறிவுறுத்தலின் படியும், திருவானைக்கோவில் கோவில் வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தின் அருகிலேயே, யானை சேற்றில் குளிப்பதற்காக ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் 1,200 சதுர அடியில் புதிதாக சேற்று குளியல் குளம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, சேற்றுக்குளம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
இதனையொட்டி, குளத்தில் சுமார் ஒன்றரை அடி உயரத்துக்கு களிமண் கொட்டப்பட்டு, அதனுள் 100 கிலோ உப்பு, நீர் சேர்க்கப்பட்டு சேறாக மாற்றப்பட்டது. தொடர்ந்து பாகன்கள் யானை அகிலாவை, அந்த சேற்று குளத்துக்குள் இறக்கிவிட்டனர். சேற்றுக்குளத்தை கண்டதும் உற்சாகமடைந்த யானை அகிலா, சேற்றுக்குள் தனது துதிக்கையினால் அடித்தும், புரண்டும் , தன் மீது சேற்றை வாரி இறைத்துக்கொண்டும் விளையாடி மகிழ்ந்தது. இதனை கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் பார்வையிட்டு சென்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8
#டெலிகிராம் மூலமும் அறிய...