அவர்களை பேச விடுங்கள்! நாம் சற்று விலகி நின்று கேட்போம்!- இன்று சர்வதேச பழங்குடிகள் தினம்
உலகெங்கும் வாழும் பழங்குடியினரின் உரிமைகள், தனித்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய நிலங்கள் ஆகியன காக்கப்பட வேண்டும் என்பதை மையப்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 9 ம் தேதியை உலகப் பழங்குடியினர் நாளாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் கடைபிடிக்கிறது. உலக மக்கள் தொகையில் பழங்குடியினர் 5 விழுக்காட்டினர். மாறாக மொத்த ஏழைகளில் இவர்கள் 15 விழுக்காடாக உள்ளனர்.
உலகில் வாழும் பழங்குடிகளில், நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமான பழங்குடிகள் இந்தியாவிலேயே வாழ்கின்றனர். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், ஒடிசா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவில் பழங்குடியினர் வாழ்கின்றனர். தமிழகத்தில் மட்டும் 36 பழங்குடியின வகுப்பை சார்ந்த சுமார் 8 லட்சம் மக்கள் வாழ்கின்றனர் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பழங்குடியின மக்கள் தலைமுறை தலைமுறையாக தங்களின் கலாச்சாரங்களையும், வாழ்வியலையும் இயற்கையுடன் இணைந்து காப்பாற்றி வாழ்கின்றனர்.
இவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக பெற்ற தங்கள் பாரம்பரிய அறிவின் மூலமாக இயற்கையிடம் இருந்தே உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம் அனைத்தையும் பெற்று வாழ்கின்றனர். இன்று பெரும்பாலான மலைகள், காடுகள் அழிப்படுவதால் பழங்குடிகளின் வாழ்வாதரங்கள் சிதைக்கப்படுகிறது இன்றைய காலத்தில் பழங்குடி மக்கள் சந்திக்கும் நெருக்கடிகள் ஏராளம்.. வனம் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு எனும் பெயரில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக வனப் பகுதிகள் அறிவிக்கப்படுவது. உணவுக்காகவே இருப்பினும், வேட்டையாடுதலை குற்றம் எனக் கூறி வனத்துறை மற்றும் வேட்டைத் தடுப்பு படைகளால் காடுகளிலிருந்து வெளியேற்றப்படுவது..
கனிம நிறுவனங்கள், சொகுசு விடுதிகள் என வன நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுதல். கொடூரமான பாலியல் வன்முறைகள், தீவிரவாதிகள் என்று கொல்லப்படுவது, மருத்துவம், கல்வி சார்ந்த சிக்கல்கள்.. மாறி வரும் காலச் சூழலுக்கேற்ப தங்களின் பாரம்பரியமான தனித்துவ கலாச்சாரக் கூறுகளை தக்கவைத்தல்என சொல்லிக் கொண்டே செல்லலாம்.
இன்னொரு பக்கம் வனவிலங்குகள், மரங்கள் போன்றவை சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருவது பெருகியுள்ளதையும் காணலாம்.மேலும் பல்வேறு அரசு /தனியார் நிறுவனங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களுக்காக வழங்கப்படும் இழப்பீடும் சொற்பமானவை. மற்ற யாவரையும் விட சுற்றுச்சூழல் பராமரிப்பிலும், வன விலங்குகள் பாதுகாப்பிலும் பழங்குடியினர் சிறப்பு வாய்ந்தவர்கள்.
ஆனால் இன்று தங்களின் தன்னிறைவு வாழ்க்கையையும், தனித்துவத்தையும் இழந்து நிற்பதோடு, கொத்தடிமைகளாகவும், அற்பக் கூலிக்கு உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
தங்கள் மீதான பொருளாதாரச் சுரண்டல்கள், பண்பாட்டு அழிப்புகள், மனித உரிமை மீறல்கள் என அனைத்துக்கும் எதிராக வாழ்நாள் முழுவதும் போரிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.. பழங்குடியினர் என்பவர்கள் மனித சமூகத்தின் ஆதி வடிவம், இவர்களிடம் தனித்த மொழி, கலாச்சாரங்கள் இருந்தாலும் இவர்களிடம் மத அடையாளங்கள் எதுவும் இல்லை இதற்கான சான்று. இவர்கள் பெரும்பாலும் இயற்கையை வணங்கும் முறையையே கடைபிடிக்கின்றனர், உலகமெங்கும் வாழும் பெரும்பாலான பழங்குடிகளின் இறை என்பது இயற்கையே. இயற்கையின் பிள்ளைகளான இவர்களின் புரிந்துகொள்வதுதான் இவர்களுக்கான அடிப்படை உரிமைகளும் கிடைப்பதற்கும், இவர்களின் வாழ்வாதாரம் காக்கப்படுவதற்குமான ஒரே வழி.
"நாங்கள் இந்த மண்ணுக்குரியவர்கள்!இந்த மண்ணும் எமக்குரியது!"என்று மலையெங்கும் ஒலிக்கும் குரலை இனியாவது செவிமடுத்துக் கேட்போம்!
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO