மலைக்கோட்டை தாயுமானவர்சுவாமி கோவில் தெப்பத் திருவிழா கொடியேற்றம்
திருச்சிக்கு பெருமை சேர்ப்பதும், தென்கயிலாயம் எனப்புகழ் பெற்றதுமான மலைக்கோட்டை தாயுமானவர்சுவாமி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இக்கோயிலில் பங்குனி தெப்ப திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும், அதன்படி இன்று தாயுமானவர் சுவாமி (சிவபெருமான்), மட்டுவார்குழலம்மை சமேதராக மற்றும் உற்சவமூர்த்திகளுடன் எழுந்தருளினர்.
அதனைத் தொடர்ந்து இன்று காலை தாயுமானவர் சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் சிவாச்சார்யார்கள் வேதமந்திரங்கள் முழங்க மிதுன லக்னத்தில் துவஜாரோஹணம் கொடி ஏற்றப்பட்டு, வைபவம் வெகுசிறப்புடன் தொடங்கியது. பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியையும், அம்பாளையும் வழிபாடு செய்தனர்.
பத்து நாட்கள் நடைபெறும் தெப்பத் திருவிழா கொடியேற்றத்தை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். திருவிழாவின் ஒன்பதாம் நாளான வரும் ஏப்ரல் 3-ம் தேதி தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. அன்றைய தினம் சுவாமி அம்பாள் மாலை 5 மணிக்கு புறப்பட்டு பிரம்ம தீர்த்த தெப்பக்குளத்தில் மாலை 7 மணிக்கு எழுந்தருளி தெப்பத்தில் காட்சியளிப்பர்.
பின்னர் தெப்பம் ஐந்து முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வைபவத்தினை காண ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருவர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை மேற்கொண்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn