போட்டோ ஸ்டுடியோ கடையில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள கேமராக்களை திருடிய நபர் கைது

போட்டோ ஸ்டுடியோ கடையில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள கேமராக்களை திருடிய நபர் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் திருச்சி சாலையில் உள்ள இந்திரா திரையரங்கம் அருகில் ஓய்வு பெற்ற இரயில்வே பாதுகாப்புப்படை வீரர் முத்துப்பாண்டி என்பவர் போட்டோ ஸ்டுடியோ கடை வைத்து நடத்தி வருகிறார். கடையினை அவரது மகன் சந்தோஷ் நிர்வகித்து வந்த நிலையில் கடந்த (15.11.2022) அன்று இரவு கடையினை பூட்டிவிட்டு சென்ற சந்தோஷ் மறுநாள் காலை கடையினை திறக்க வந்த போது கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு ஷட்டர் திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் கடை உள்ளே சென்று பார்த்த போது சுமார் ரூ.8 இலட்சம் மதிப்புள்ள கேமரா, லென்ஸ்கள் மற்றும் ஸ்டுடியோ உபகரணங்கள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற மணப்பாறை காவல்துறையினர் திருட்டு சம்பவம் குறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு முகமூடி கொள்ளையனை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த டிஎஸ்பி ராமநாதன் தலைமையிலான தனிப்படையினர் சந்தேகத்திற்கு இடமான முறையில் கையில் கட்டை பையோடு சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த நபர் தனது சொந்த மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் என்றும், தனது கல்யாண நாளை கொண்டாடுவதற்காக தான் மட்டும் மணப்பாறையில் தங்கியிருப்பதாகவும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவனை காவல் நிலையம் அழைத்து வந்து மேற்கொண்ட தீவிர விசாரணையில் மணப்பாறை மாரியம்மன் கோவில் அருகே உள்ள ஸ்டுடியோ கடையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் கொள்ளையடித்ததையும், தற்போதும் வழக்கமாக கொள்ளையடிக்க வந்திருப்பதாகவும் அதற்காக இரண்டு இடங்களை நோட்டமிட்டு வைத்துள்ளதாகவும் கூறியுள்ளான். அதைத் தொடர்ந்து அவனிடமிருந்த ரூ. 8 லட்சம் மதிப்பிலான கேமராக்களை பறிமுதல் செய்து முகமூடி கொள்ளையினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விசாரணையின் போது தான் கடந்த பத்து வருடங்களாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தன் மேல் 350 க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்த நிலையில் 250 வழக்குகள் லோக் - அதலாக் மூலம் முடிவடைந்ததாகவும், இன்னும் 120 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பல திடுக்கிடும் தகவல்களை கூறி காவல்துறையினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளான். 

அதேபோல் கடந்து பத்து வருடங்களாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த முகமூடி கொள்ளையள் மணப்பாறை காவல்துறையினரிடம் சிக்கியிருப்பது முதல் தடவையாகும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision