திருச்சி மாநகராட்சி ஊழியராக நடித்து பணம் திருடிய வாலிபர் கைது
திருச்சி ராமச்சந்திரபுரம் விரிவாக்கம் சாஸ்திரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அஜய் குமார் ஷர்மா (66). இவர் தனது மனைவியுடன் வீட்டில் இருந்தார். அப்போது ஒருவர் அவரது வீட்டுக்கு வந்து தன்னை மாநகராட்சி ஊழியர் என அறிமுகம் செய்து கொண்டார்.
பின்னர் குடிநீர் குழாய்கள் பொருத்த வந்திருப்பதாக தெரிவித்தார். இதையெடுத்து அஜய்குமார் அவரை வீட்டுக்குள் அமர வைத்தார். பின்னர் அந்த நபர் குடிக்க குடிநீர் கேட்டார். உடனே அஜய்குமார் சமையல் அறைக்கு குடிநீர் எடுத்து வர சென்றார். அந்த நேரத்தில் வீட்டின் மேஜையில் வைத்திருந்த ரூ. 3,800 பணத்தை அந்த மர்ம நபர் எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.
உடனே அஜய்குமார் திருடன் திருடன் என சப்தமிட்டார். அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பக்கத்து தெருவில் அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் தில்லை நகர் காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர்.
காவல் துறை விசாரணையில் பிடிபட்டவர், திருச்சி தில்லை நகர் 7வது கிராஸ் தூக்கு மேடை தெரு பகுதி சேர்ந்த மாரிமுத்து (29) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn