திருச்சி அமைச்சர் தொகுதியில் உள்ள அரசு பள்ளியின் அவலநிலை

திருச்சி அமைச்சர் தொகுதியில் உள்ள அரசு பள்ளியின் அவலநிலை

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில், அரசு ஆதி திராவிடர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. தமிழகத்தில் மாதிரி பள்ளிகளாக ஆறு பள்ளிகளை தரம் உயர்த்த உள்ள நிலையில் அதில் ஒன்றான இந்த பள்ளியில், பல மாதங்களாக பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்தும், முன்பக்க நுழைவாயில் கதவு உடைந்த நிலையிலும் கிடப்பதால், பள்ளியின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

மாணவர்களுக்கான கழிப்பிடம் நீரின்றி இருப்பதால், உபயோகப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால், அந்தக் கழிப்பிடத்தை சமூகவிரோதிகள் மது அருந்தவும் மற்றும் பல தீய செயல்களுக்கு கூடாரமாக அமைந்து விட்டது. மேலும், குழாயில் தண்ணீர் வருவதில்லை. இந்த கடும் வெயில் காலங்களில் மாணவர்கள் அதிக அளவில் நீர் அருந்த வேண்டும் என்ற மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். ஆனால், பள்ளியில் குடிநீர் இல்லாமல் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இவற்றைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கோடை விடுமுறையிலேயே இப்பள்ளியின் அடிப்படை வசதிகளை செய்திருக்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தொகுதியான திருவெறும்பூர் தொகுதியில் உள்ள ஆதி திராவிட பள்ளி, மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், அதிகாரிகளின் மெத்தன போக்கால், மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே உடனடியாக போர்க்கால அடிப்படையில் இப்பள்ளியின் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், என மாணவர்களும் பெற்றோர்களும் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

திருச்சியின் முக்கியமான பகுதியாகவும், பள்ளிக் கல்வி துறை அமைச்சரின் தொகுதியாகவும் உள்ள திருவெறும்பூரில் உள்ள பள்ளிக்கு சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn