ஜவுளி பூங்கா தொடர்பான கூட்டம் தேதி மாற்றம் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.
ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்த பட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள் பொது பயன்பாட்டிற்கான கட்டிடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.
தற்போது தொழில்முனைவோரின் கோரிக்கையைத் தொடர்ந்து, தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில் ஜவுளி தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டிடங்களையும் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காக்கள் அமைத்து நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்பு பெருகும். மேலும், அதிகளவில் அந்நிய செலாவணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். எனவே சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை அனைத்து மாவட்டங்களிலும் பயன்படுத்தி, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் வேலைவாய்ப்புகளை பெருக்கவும் அனைத்து தொழில் முனைவோரும் முன்வர வேண்டும். மேற்காண் பொருள் தொடர்பாக ஆலோசிக்கும் பொருட்டு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் எதிர்வரும் (22.11.2023) அன்று பிற்பகல் 04:30 மணியளவில் நடைபெற இருந்த கூட்டம் நிர்வாக காரணத்தை முன்னிட்டு (07.12.2023) அன்று பிற்பகல் 04.00 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
இக்கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், தமிழ்நாடு அரசால் துணிநூல் துறையின் கீழ் ஜவுளித் தொழில் சார்ந்த தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கீழ்க்கண்ட முகவரியினை தொடர்பு கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : மண்டல துணை இயக்குநர், துணிநூல்துறை, மண்டல துணை இயக்குநர் அலுவலகம், எண். 30/3, நவலடியான் வளாகம் முதல் தளம், தாந்தோணிமலை, கரூர்-639 005. தொலைபேசி எண் : 04324-299 544, +91-9843212584.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision