மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் என்று திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் அமைச்சர் கே.என்.நேரு வாக்குறுதி
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது, தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டி உள்ள அணையை இடிப்பதற்கு உரிய உத்தரவினை வழங்க வேண்டும், தமிழ்நாட்டின் சமூக நீதியை காப்பாற்றி, நிலை நிறுத்த ஜாதி வாரிக்கணக்கெடுப்பு நடத்திய பிறகே யாருக்கு எவ்வளவு இட ஒதுக்கீடு என்று முடிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மனித எலும்புக்கூடுகளுடன் விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் முன்பு அரை நிர்வாணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை சார்பில் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது.
அப்போது விவசாயிகள் போராட்டம் பற்றி தகவலறிந்து வந்த அமைச்சர்கள் விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். பின்னர் விவசாயிகள் மத்தியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு கர்நாடகா மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம். தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்டுள்ள அணை இடிப்பதற்கு நீதிமன்றத்தை அணுகி உரிய தீர்வு காணப்படும். நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் விவசாயிகளுக்கு என தனி பட்ஜெட் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
பின்னர் அமைச்சர் வாக்குறுதியை ஏற்று கொண்ட விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியர் சாலை முழுவதும் மூடப்பட்டு மாற்று பாதையில் வாகனங்கள் சென்றன. மேலும் மாவட்ட ஆட்சியர் நுழைவாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி விவசாயிகளால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிருந்து மற்ற அதிகாரிகள் வாகனமும் வெளியே செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்க நிலை ஏற்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY