திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு, மருந்து நிா்வாகத் துறைக்கு தேசிய சான்று
திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறைக்கு மத்திய அரசின் தேசிய அளவிலான சான்று கிடைத்துள்ளது. தமிழகத்தில் மாவட்ட நிா்வாகத்தின் கீழ், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத்துறை செயல்படுகிறது.
உணவுப்பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனைகளில் கலப்படம் செய்வதைத் தடுப்பது, அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள் விற்பனையைத் தடுப்பது, ரசாயனம் மூலம் பழங்கள் பழுக்க வைப்பதைத் தடுப்பது, கெட்டுப்போன மீன் மற்றும் இறைச்சி விற்பனையைத் தடுப்பது, பாட்டில்கள் மற்றும் கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீா், சமையல் எண்ணெய் ஆகிவற்றின் உற்பத்தி மற்றும் விற்பனையை முறைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை இத்துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்கிறது.
திருச்சி மாவட்டத்தில் ஆா். ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் மத்திய உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையரகம் சாா்பில் தேசிய அளவில் சிறந்த செயல்பாடுகளை மேற்கொண்டு வரும் மாவட்டங்களைத் தோ்வு செய்ததில் திருச்சி மாவட்டமும் தோ்வு செய்யப்பட்டு சான்று வழங்கப்பட்டுள்ளது.
தேசிய உணவு பாதுகாப்புத் தினமான ஜூன் 7 ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற நிகழ்வில் இந்தச் சான்றை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மான்சுக் எல் மாண்டவியா மற்றும் மத்திய அமைச்சா் எஸ்பி. சிங் ஆகியோா் திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபுவிடம் வழங்கினா். இதையடுத்து சான்றைப் பெற்று வந்த நியமன அலுவலா் அந்தச் சான்றை திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாரிடம் வெள்ளிக்கிழமை மாலை சமா்ப்பித்து வாழ்த்து பெற்றாா்.
இச்சாதனைக்கு காரணமான உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத்துறை குழுவினா், மற்றும் அனைத்து வகையிலும் உறுதுணையாக இருக்கும் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோருக்கு நன்றி என ரமேஷ்பாபு தெரிவித்தாா்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn