நவலூர் குட்டப்பட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா

நவலூர் குட்டப்பட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஸ்ரீரங்கம் வட்டம் நவலூர் குட்டப்பட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழா, கலை விழா மற்றும் விளையாட்டு விழா என முப்பெரும் விழாவினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.பெண்களுக்கான கபடி போட்டியில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி விழாப் பேருரையாற்றினார்.

இதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்... தமிழக முதல்வர் மாணவ, மாணவிகளின் உயர் கல்விக்காக பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறார். கடந்த ஓராண்டில் 20 அரசு கல்லூரிகள் அறநிலையத்துறையின் சார்பில் 10 கல்லூரிகள் என மொத்தம் 30 கல்லூரிகளை வழங்கியுள்ளார்.

மணப்பாறையில் ஒரு கல்லூரி அமைக்கப்படவுள்ளது. நவலூர் குட்டப்பட்டில் உள்ள இந்த அரசு கல்லூரி தொடங்கி பத்தாண்டு காலத்தில் சிறப்பான நிலையை அடைந்துள்ளது. கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் பிள்ளைகள், ஏழை எளியோரின் பிள்ளைகள் படித்து பயன்பெறுகின்றனர். படிப்பிலும் விளையாட்டிலும் சிறந்த தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மிகவும் பாராட்டத்தக்கது.

பல்வேறு அரசு பணிகளுக்கு தேர்வு பெறுபவர்களும், மருத்துவத்துறையில் பணியாற்றும் மருத்துவர்களும், கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட பெரும்பாலோனர் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்தவர்கள்தான். இவர்கள் எல்லாம் மிகத் திறமையாக பணியாற்றுகின்றனர்.  சிறந்த பேராசிரியர்கள் அரசு கல்லூரிகளில் பணியாற்றுகின்றனர்.
ஆகவே மாணவ, மாணவிகள் கல்வியிலே தனிக்கவனம் செலுத்தி பயின்றிட வேண்டும். மாணவிகளின் தடையில்லாத உயர்கல்விக்காக தமிழக முதல்வர் அவர்கள் மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்குகின்ற சிறப்பான திட்டத்தை அறிவித்துள்ளார்கள்.

இதைப்போல பல்வேறு திட்டங்களின் வாயிலாக கல்வி வளர்ச்சிக்கு தமிழக முதல்வர் அவர்கள் உதவி வருகிறார்கள். இந்த கல்வியை முடித்து நீங்கள் வேலை வாய்ப்பைப் பெறுகின்ற வகையில் மணப்பாறை பகுதியில் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிப்காட் வளாகத்தில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை  அமையவுள்ளது. இதில் ஏறத்தாழ 3000 முதல் 4000 பேர் வரை வேலைவாய்ப்பு பெற்று பயனடைய முடியும். பல்வேறு போட்டித் தேர்வுகளிலும் மாணவர்களாகிய நீங்கள் பங்கேற்று சிறப்பான பணியினைப் பெற்று முன்னேறிட வேண்டும். இக்கல்லூரிக்குத் தேவையான முதுநிலை படிப்புகள் ஏற்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்.

இவ்விழாவினையொட்டி, பல்வேறு படிப்புகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கும், கவிதைப் போட்டி கட்டுரைப் போட்டி பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கும், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம். பழனியாண்டி,

மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், வருவாய் கோட்டாட்சியர் திருமதி.ந. சிந்துஜா, கல்லூரி முதல்வர் முனைவர். தே.மலர்விழி மற்றும் பேராசிரியர்கள் எஸ்.கார்த்திக், முனைவர் டி.உண்ணாமலை, முனைவர் எஸ்.செல்லம்மாள், முனைவர்.ஆர்.ஜெயா, முனைவர் . துரை மணிகண்டன் ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.co/nepIqeLanO