ரூ.16 கோடியில் 3 வழிகளுடன் புதிய பாலம் - அடிக்கல் நாட்டிய அமைச்சர்

ரூ.16 கோடியில் 3 வழிகளுடன் புதிய பாலம் - அடிக்கல் நாட்டிய அமைச்சர்

திருச்சிராப்பள்ளி ஜங்ஷன் இரயில் நிலையம் அருகில் இரயில்வேயில் அமைந்துள்ள சாலை மேம்பாலம் குறுகலானதாக இருந்ததால், அதை திரும்பக் கட்ட அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு திருச்சிராப்பள்ளி மாநகரில் அகலம் குறைந்த திருச்சி ஜங்ஷன் இரயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக புதிய மேம்பாலம் அமைக்கும் பணி 2 கட்டங்களாக கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. சாலை மேம்பாலத்தின் மொத்த மதிப்பு ரூபாய் 168.34 கோடியாகும்.

அதைத் தொடர்ந்து முதல் கட்டமாக அரிஸ்டோ ரவுண்டானாவை மையமாக வைத்து திண்டுக்கல் சாலை, மத்திய பேருந்து நிலையப்பகுதி, ஜங்ஷன் இரயில் நிலையம், மதுரை சாலை மற்றும் சென்னை சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் புதிய சாலை மேம்பாலம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் இரயில்வேத் துறையுடன் ஒருங்கிணைந்து பணி மேற்கொள்ளப்பட்டதாலும் மேலும் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான 0.633 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டியிருந்ததாலும் பணியில் தொய்வு ஏற்பட்டது. தொடர் ஆய்வு மற்றும் நடவடிக்கைகள் மூலம் மேற்படி குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு இராணுவ நிலம் கையகப்படுத்தப்பட்டு முதல் கட்டப் பணி முழுமையாக முடிக்கப்பட்டு (29.05.2023) அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து, இரண்டாம் கட்டப் பணியின் மதிப்பீடு ரூ.16.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணி துவங்கும் வகையில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இரயில்வே மேம்பாலத்தின் மொத்த நீளம் 770.00 மீ. இப்பாலம் நடை பாதையுடன் கூடிய மூன்று வழி இரயில்வே மேம்பாலம் ஆகும். இப்பாலத்தின் மொத்த அகலம் 13.50மீ ஆகும். இப்பாலம் 15 மாதங்களுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வே.சரவணன், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர்கள் செல்வி, கிருஷ்ணமூர்த்தி, கோட்டப்பொறியாளர்கள் முருகானந்தம், கண்ணன், உதவி கோட்டப்பொறியாளர்கள் மீனாட்சி, புகழேந்தி, ஜெயராமன், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision