போலீஸ் அதிகாரி தோரணையில் திருச்சி அதிகாரியிடம் பேசி ரூ25 லட்சம் பெற்ற சம்பவம்
திருச்சி புத்தூர் ரெங்கநாதபுரம் ஆபிஸர்ஸ் காலனியை சேர்ந்தவர் ஆனந்தன் (59). இவர் எல்.ஐ.சி அலுவலகத்தில் மலைக்கோட்டை கிளையின் உதவி மேலாளராக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்று விட்டார்.
பின்னர் தஞ்சை எல்.ஐ.சி கிளையில் விசாரணை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 9- ந் தேதி இவருடைய செல்போன் எண்ணை மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் தன்னை டிராய் அதிகாரி என்றும், கனரா வங்கியில் உங்கள் செல்போன் எண் மற்றும் ஆதார் எண்ணை பயன்படுத்தி ரூ. 37 கோடி மதிப்பில் ஹவாலா பணப்பரிமாற்றம் செய்துள்ளதாக கூறியதுடன், இது தொடர்பாக சிபிஐ உங்களை விசாரிக்கும் என்று தெரிவித்துள்ளார். பின்னர் மும்பை குற்றப்பிரிவு போலீஸ் பேசுவதாக கூறி மற்றொரு நபரும் அதையே கூறியுள்ளார்.
அத்துடன் உங்கள் மீது பிணையில் வர முடியாத இரு பிடிவாரண்ட் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை ரிசர்வ் வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்து வைக்கும் படியும், விசாரணை முடிந்த பிறகு உங்கள் பணத்தை திருப்பிக் கொடுப்பதாகவும் கூறியுள்ளனர். இதை நம்பிய அதிகாரி ஆனந்தன் தனது வங்கி கணக்கில் இருந்த ரூபாய் 25 லட்சத்து 48 ஆயிரத்து 500 ரெக்கத்தை, அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துவிட்டார்.
அதன் பின்னர் அவர் அந்த எண்ணுக்கு செல்போனில் தொடர்பு கொண்ட போது அவர்கள் போனை எடுக்கவில்லை. இந்நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆனந்தன் இது குறித்து திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision