திருச்சியில் ஒரு டன் குட்கா - 3 கார்கள் பறிமுதல் - 4 பேர் கைது

திருச்சியில் ஒரு டன் குட்கா - 3 கார்கள் பறிமுதல் - 4 பேர் கைது

திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கசாவடி அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் கார் நிற்பதாக சமயபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீசார் சுங்க சாவடிக்கு சென்று சந்தேகத்திற்கு இடமாக நின்ற காரை சோதனை செய்தனர். அதில் வடமாநிலத்தைச் சேர்ந்த இருவர் இருப்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் காரில் இருந்த மூட்டைகளை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா இருந்தது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் அவர்களை விசாரணை செய்த போது லால்குடி புதூர்

உத்தமனூர் பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவரது வீட்டிற்கு கொண்டு செல்வதற்காக குஜராத் மாநிலத்தில் இருந்து இந்த தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்களை எடுத்து வந்ததாக கூறினர். இதனை தொடர்ந்து புதூர் உத்தமனூர் உள்ள இளையராஜாவின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது இளையராஜா வீட்டிற்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்கள் சோதனை செய்ததில், அந்த இரண்டு கார்களிலும் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.  

இதனை அடுத்து இளையராஜா, அவரது கார் ஓட்டுநர் தச்சங்குறிச்சி சேர்ந்த மணிராஜ், குஜராத் மாநிலத்தை சேர்ந்த மகிபால்சிங், கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த அமீர்சிங் ஆகிய நால்வரையும் கைது செய்தும் குட்கா பான் மசாலா போன்ற பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மூன்று கார்களையும் கார்களில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் எடையுள்ள

ரூ. 7 லட்சம் மதிப்பிலான பான் மசாலா, குட்கா ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஒரு டன் எடை கொண்ட பான் மசாலா மற்றும் குட்கா பொருட்கள் எந்தெந்த பகுதிக்கு விற்பனை செய்கின்றனர். இதில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.