மணல் கொள்ளையில் ஊராட்சி தலைவர்கள் - திருச்சியில் அண்ணாமலை குற்றச்சாட்டு
பா.ஜ., கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக முழுவதும் தொகுதி வாரியாக, ‘என் மண், என் மக்கள்’ என்ற பிரச்சார பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். திருச்சி மாவட்டம், துறையூரில் நேற்று, பாதயாத்திரை மேண்கொண்டார். அப்போது அவர் தொண்டர்கள் கூட்டத்தில் பேசுகையில்...... இளைஞர்கள் நலன், ஏழைகள் மேம்பாடு இவைதான் பா.ஜ., கட்சியின் நோக்கம். தமிழகத்தில், பொதுமக்களை பற்றி கவலைப்படாத தி.மு.க., ஆட்சியில் இருக்கிறது. வருவாய்த் துறை அதிகாரிகளை அடித்து மிரட்டி, தி.மு.க.,வை சேர்ந்த ஊராட்சித் தலைவர்களே மணல் கொள்ளையடியில் ஈடுபடுகின்றனர். அரசு அதிகாரிகள் பாதுகாப்புக்கு துப்பாக்கி வைத்துக் கொண்டு, வேலை பார்க்கும் அளவுக்கு அராஜகம் பெருகி விட்டது.
பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் விரும்புகிறார். கவர்னர் அதை விரும்பவில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்ட அறிவும் ஆற்றலும் மிக்க பேராசிரியர் பணிபுரிந்தவர் துணை வேந்தராகவும், கவர்னர் வேந்தராகவும் இருக்க வேண்டும் என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 1994ல், அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை திரும்பப் பெற்ற தி.மு.க., தற்போது, அதே சட்டத்தை கொண்டு வந்து, கவர்னருக்கு பதிலாக, பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வர் இருக்க வேண்டும், என்கிறது. இதை ஒரு பிரச்னையாக வைத்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். தி.மு.க.,வினரின் மருத்துவக் கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கைக்காக, நீட் ஒழிப்பு என்று போராட்டம் நடத்துகின்றனர். மக்களின் வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முயற்சி செய்யாமல், சனாதனத்தை, நீட்டையும் ஒழிப்பதாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல், வரி இனங்களை உயர்த்தி, சராசரி மக்கள் வாழ்க்கை நடத்துவதை கேள்விக்குறியாக்கி உள்ளனர். ‘வாக்கிங்’ சென்று மக்களை சந்திக்கும் முதல்வருக்கு, மக்களின் பிரச்னைகள் தெரியவில்லை. மக்கள் பிரச்னைகளை புரிந்து கொள்ளாத, தலையாட்டி முதல்வர் ஆட்சி நமக்கு வேண்டாம். பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். வயல்வெளியில் சிவப்பு கம்பளம் விரித்து நடக்கும் முதல்வர், விவசாயிகள் பிரச்னைகளை எப்படி புரிந்து கொள்வார். எந்த மாநிலத்திலும் இல்லாவாறு, சிப்காட்டுக்கு நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்கு போட்டுள்ளனர். பா.ஜ., கட்சி குரல் கொடுத்ததை தொடர்ந்து, குண்டர் சட்டம் போட்டதே தெரியாது, என்று கூறி வாபஸ் பெற்றுள்ளனர்.
பாலில் கொழுப்பு மற்றும் புரதச் சத்துக்களை குறைத்து விட்டு, விலையை குறைக்காமல், ஆவின் பால் விற்பனையிலும் விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்கின்றனர். இளைஞர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள், பா.ஜ., கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டும். விடுபட்ட பகுதிகளின் வளர்ச்சிக்கு பாடுபடுவதே பா.ஜ., கட்சியின் நோக்கம். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் கோயம்புத்துார் ஆகிய மாவட்டங்களில் மட்டும் தமிழகத்தில் உற்பத்தி திறனில் 32 சதவீதம் உள்ளது. புதுக்கோட்டை, கரூர், திருச்சி போன்ற மாவட்டங்களின் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கு, பா.ஜ., கட்சி நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்திலும் கூட்டுக் கொள்ளையடிக்கும் தி.மு.க., எதற்காக ஆட்சியில் இருக்க வேண்டும், என்று சிந்தியுங்கள் என்று அவர் பேசினார்.