வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024 - ஆலோசனைக்கூட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் (Roll Observer) மற்றும் நில சீர்திருத்த ஆணையாளர் வெங்கடாஜலம் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்குப்பதிவு அலுவலர்கள் ஆகியோருடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் இரா.வைத்திநாதன், கலந்து கொண்டனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி (01.01.2023)-னை தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளிலும் 2023 ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் நடைப்பெற்று வருகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தால் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் (Roll Observer) பார்வையாளர் முனைவர். ந.வெங்கடாசலம், ஆணையர், நிலச்சீர்திருத்தத்துறை, தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு சுருக்கத்திருத்த முறையின் மூலமாக வாக்காளர் பட்டியல் முழுவதும் தூய்மையாக தயார் செய்யும் பொருட்டு இறந்த வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட வேண்டியது அவசியமாகிறது என்றும், இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் உரிய விசாரணை மேற்கொண்டும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் வாக்குச்சாவடி முகவர்களிடமிருந்து இறந்த / புலம் பெயர்ந்த வாக்காளர்களின் விபரத்தினை பெற்றும் கள விசாரணை அடிப்படையில் நீக்கம் செய்யப்பட வேண்டும் என வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அறிவுறுத்தப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் உள்ள மொத்த மக்கள் தொகை விபரத்தினை பெற்று, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக சிறப்பு முகாமிற்கு வரும் பொதுமக்களிடம் அதனைப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி, வாக்களிக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரது ஆதார் விவரங்களையும் பெற்று வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களுடன் ஒப்பிட்டு படிவம் 6 - பி மூலமாக சம்மந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் செயலியில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தினார்.
18 - 19 வயதுக்குட்பட்ட வாக்காளர் / மக்கள் தொகை விகிதம் (E/P Ratio) புள்ளி விவரத்தினை ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலையிலும் கணக்கிட்டு அதனடிப்படையில் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டிய இலக்கினை நிர்ணயம் செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடும் பொருட்டு அனைத்து கல்லூரிகளிலும் விழிப்புணர்வு முகாம்கள் மேற்கொண்டு இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்ட கருத்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் பார்வையாளர் தெரிவித்தார்.