கேப்டனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய திருச்சி மக்கள்
திரைப்பட நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் (71) உடல்நல குறைவால் நேற்று மரணமடைந்தார். சினிமாவிலும், அரசியலிலும் முத்திரை பதித்து வந்த விஜயகாந்த், தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து நின்று 83 சதவீத வாக்குகளை பெற்று மற்ற அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்தார்.
மேலும் தேமுதிக தலைவர், சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்று அரசியலில் தன்னை உயர்த்திக் கொண்ட விஜயகாந்த் சில ஆண்டுகளாக உடல் நல குறைவுக்கு சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில் விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த 26 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு நுரையீரல் செயல் இழந்தது.
இதனை தொடர்ந்து அவருக்கு செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். விஜயகாந்த் மரணமடைந்த செய்தியை கேட்டு அரசியல் கட்சியினர், தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் அவரது வீட்டு முன் திரண்டனர். இந்த நிலையில் விஜயகாந்தின் மறைவிற்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள கோரிமேடு பகுதியில் அனைத்துக் கட்சியினர் இணைந்து கேப்டன் விஜயகாந்திற்க்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இதில் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள், வணிகர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் விஜயகாந்த் படத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதேபோன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் விஜயகாந்த் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision