பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

திருச்சிராப்பள்ளி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (02.09.2023) பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் ஆகியோர் மாணவியர்களுக்குவிலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்கள். மிதிவண்டிகளை வழங்கி, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்ததாவது : 

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு மாணவ, மாணவியர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் நோக்கில் கற்றல் கற்பித்தலில் எவ்வித இடையூறும் இன்றி, முழுமையாக கல்வியைப் பெறுவதற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து தொடர்ந்து நடைமுறைப்படுத்திக் கொண்டு வருகிறது. குறிப்பாக இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் சிறந்த முறையில் கல்வி பயிலும் வகையில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி அவர்களது மேல்நிலைக் கல்வியை உறுதி செய்கிறது.

முக்கியமாக மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் பள்ளிக்குச் செல்லும் தூரத்தைக் காரணம் காட்டி, பள்ளிப்படிப்பை பாதியில் விட்டு விடாமல் பள்ளிக்குச் சென்று வர உதவியாகவும் இடைநிற்றலை முற்றிலுமாக தவிர்த்திடும் பொருட்டும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது உத்தரவின்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 173 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 8,213 மாணவர்களுக்கும் 12.186 மாணவியர்களுக்கும் சேர்த்து 2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கு மொத்தம் 20,300 மிதிவண்டிகள் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் விழா நிகழ்வின் 259 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது.

அதன்படி இதுவரை 164 பள்ளிகளில் சேர்ந்த 18,783 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மிதிவண்டிகள் பெறப்பட்டு உதிரி பாகங்கள் பூட்டப்பட்டு மாணவ மாணவிகளின் கைகளுக்கு கிடைப்பதில் எவ்னித காலதாமதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் மாவட்ட நிர்வாகம் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. அதன் காரணமாக இதுவரை 92 சதவிகித பள்ளிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் சில தினங்களில் மீதமுள்ள பள்ளிகளுக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது. விலையில்லா மிதிவண்டிகள் போன்ற நலத்திட்டங்களால் அரசுப் பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கைகள் அதிகரித்துக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முகமது பாரூக், திருச்சி சேவா சங்கத்தின் தலைவர் சகுந்தலா சீனிவாசன், செயலாளர் சரஸ்வதி, மாமன்ற உறுப்பினர்கள், சேவா சங்க நிர்வாகிகள், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரிய பெருமக்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision