77 பைக்குகளை திருடிய கொள்ளையன் - குண்டர் சட்டத்தில் கைது!
திருச்சி மாநகர பகுதிகளில் வாகன திருட்டு சம்பவங்களில் தடுக்கும் பொருட்டு கடந்த 11.10.2020 அன்று கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் திருச்சி சிங்காரத்தோப்பு, மேலபுலிவார்ரோடு ஜங்ஷனில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்ததில் அந்த நபர் ராஜ்குமார்(51) திருத்துறைபூண்டி சேர்ந்தவர் என்றும், அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட இருசக்கர வாகனம் எனவும் தெரிய வரவே, அவரை மேலும் விசாரணை செய்ததில் தான் அந்த வாகனத்தை திருடியதை ஒத்துக் கொண்டுள்ளார்.
Advertisement
இதுவரை திருச்சி மாநகரம் கோட்டை, ஸ்ரீரங்கம் ஆகிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்களிலும் மற்றும் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட இடங்களிலும் சுமார் ரூ .40,00,000/- மதிப்புள்ள பல்வேறு பகுதிகளில் திருட்டு வழக்குகளில் காணாமல் போன 77 இருசக்கர வாகனங்களை திருடியதை ஒப்பு கொண்டுள்ளார்.
Advertisement
அவரை கைது செய்து அவர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் பேரில், அவர் திருடி மறைத்து வைத்திருந்த 77 இருசக்கர வாகனங்களை அடையாளம் காட்டி ஆஜர் செய்ததை கைப்பற்றி குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டும் கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையின் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன், குற்றவாளி ராஜ்குமாரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி ராஜ்குமார் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.