மணல் லாரி மோதி கூலி தொழிலாளி பலி- சடலத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்

மணல் லாரி மோதி கூலி தொழிலாளி பலி- சடலத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி திருவானைக்காவல் அருகே பனையபுரம் ஊராட்சியினைச் சேர்ந்தவர் ஸ்டீபன் மகன் மார்ட்டின் (வயது 35). இதே பகுதி சேர்ந்த மாணிக்கம் மகன் சகாயம் வயது 36. இவர்கள் இருவரும் கூலி தொழிலாளி. தற்போது திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் மணல் ஏற்றி வரும் லாரிகளில் தினசரி லோடுமேன் வேலைக்கு இருவரும் செல்வது வழக்கம்.

அவ்வாறு நேற்று (02.12.2022) வெள்ளிக்கிழமை இரவு மணல் லாரியில் லோடுமேன் ஆக செல்வதற்காக இருவரும் இரு சக்கர வாகனம் மூலம் திருவானைக்காவல் பகுதியில் உள்ள திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது திருவளர்ச்சோலை என்ற இடத்தில் வந்த போது கல்லணையில் இருந்து திருச்சி நோக்கி வந்த மணல் லாரி இருசக்கர வாகனம் மீது மோதியதில் மார்ட்டின் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் .

சகாயம் படுகாயம் அடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மார்ட்டின் உயிரிழந்ததை அறிந்த பனையபுரம் ஊராட்சி மக்கள் மற்றும் மார்ட்டின் உறவினர்கள் திருவானைக்காவல் கல்லணை சாலையில் சடலத்துடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீரங்கம் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விபத்துனை ஏற்படுத்தி தப்பி சென்ற லாரியையும் கண்டுபிடிப்பதோடு மட்டுமல்லாது அதன் ஓட்டுநரையும் கைது செய்ய வேண்டும். இப்பகுதியில் அதிகளவில் வரும் மணல் லாரிகளை மாற்று வழியில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்றுக் கொண்ட காவல் துறையினர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதின் அடிப்படையில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

இதைத் தொடர்ந்து உயிரிழந்த மார்டீன் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்தும் கூலித் தொழிலாளி மீது மோதி உயிரிழப்பை ஏற்படுத்திய லாரியையும் அதன் ஓட்டுனர் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருவானைக்கோவில் கல்லணை சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO