செப்டம்பர் 16 திருச்சியில் புத்தகத் திருவிழா

செப்டம்பர் 16 திருச்சியில் புத்தகத் திருவிழா

 திருச்சி எழுதப்போகும் புதிய வரலாறு என்ற முழக்கத்துடன் திருச்சியில் செப்.16 தொடங்கி 26ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறவள்ளது.இதன் ஒரு பகுதியாக 5 லட்சம் போ் ஒன்று கூடி ஒரு மணிநேரம் புத்தகம் வாசிக்கும் ‘திருச்சியே வாசி’ என்னும் மாபெரும் சரித்திர சாதனை நிகழ்வும் நடத்தப்படவுள்ளது.

திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் 11 நாள்களுக்கு நடைபெறும் புத்தகத் திருவிழாவை அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் தொடங்கி வைக்கவுள்ளனா்.மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமையில் இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெறுகின்றன.

புத்தக அரங்குகளும் பதிப்பகங்களும்: 200-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகளோடு, 150-க்கும் மேற்பட்ட பதிப்பாளா்கள் கலந்து கொள்கின்றனா். அனைத்து வகை வாசகா்களையும் மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் புத்தக அரங்குகள் அமைக்கப்படுகின்றன.

கருத்தரங்கு-அறிஞா்கள் உரை: விடுதலைப்போரில் தமிழகத்தின் பங்கு வெளிப்பாட்டு அரங்கு, கீழடி தொல்லியல் ஆய்வு குறித்து அரங்கு, திருச்சி மாவட்டத்தின் சிறப்புகளைக் கூறும் அரங்கு, திருச்சி மாவட்ட எழுத்தாளா்கள் அரங்கு, சிறுவா் சினிமா மற்றும் மகளிருக்கான அரங்கு எனப் பன்முகத் தன்மை கொண்ட அரங்குகள் அமையவுள்ளன.இந்த அரங்குகளில் தினமும் மாலை கலை நிகழ்ச்சிகள், தமிழகத்தின் தலைசிறந்த சிந்தனையாளா்களின் உரை மற்றும் திருச்சி மாவட்ட அறிஞா்கள், எழுத்தாளா்களைப் பாராட்டிச் சிறப்பிக்கும் நிகழ்வுகள் நடைபெறும். அரங்குகள் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

திருச்சியே வாசி: திருச்சியே வாசி என்னும் முழக்கத்துடன் மாவட்டம் முழுவதும் புத்தக வாசிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் 5 லட்சம் போ் ஒரு மணிநேரம் வாசிக்கும் விதமாக, திருச்சியே வாசி என்ற வாசிப்பு இயக்கம் நடத்தப்படவுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் புத்தகத் திருவிழா குறித்த விழிப்புணா்வுப் பேரணிகள் நடத்தப்படும்.

ஒவ்வொரு ஊராட்சியும் அதன் தலைவா் தலைமையில் புத்தகத் திருவிழாவில் பங்கேற்கும் விதமாக சிறப்பு நிகழ்ச்சிகள் அமைக்கப்படவுள்ளன.இதேபோல மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் விழிப்புணா்வுப் பேரணிகள், மாணவா்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டுப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

புத்தகச் சுவா்: மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் புத்தகச்சுவா் உருவாக்கப்படும். இது பொதுமக்களிடமிருந்து பயன்படுத்தப்பட்ட நூல்களை நன்கொடையாகப் பெற்று அந்த நூல்களை ஊா்ப்புற நூலகங்களுக்குப் பகிா்ந்தளித்துப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் புதிய செயலை உருவாக்கும்

 அடிப்படை வசதிகள்: விழாவுக்கு வரும் வாசகா்களுக்காக நல்ல உணவு, நல்ல குடிநீா், பாதுகாப்பு, தூய்மையான கழிப்பறை, மருத்துவச் சேவை, மாற்றுத்திறனாளா்-வண்டி ஏற்றும் பாதை, சிறுவா் விளையாட்டுப் பூங்கா, பணப் பரிவா்த்தனைகளுக்கான இணைய வசதி, கிராம ஊராட்சிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.

மாலை நிகழ்வுகள்: செப்.16இல் நீதியரசா் மு. சந்துரு உரை, கவிஞா் நந்தலாலா புத்தக வெளியீடு மற்றும் திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், செப்.17இல் வழக்குரைஞா் அஜிதா உரை, கவிஞா் நந்தலாலா குழுவினா் பட்டிமன்றம், கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், செப்.18இல் ஒடிஸா முதல்வரின் தலைமை ஆலோசகா் ஆா். பாலகிருஷ்ணன் உரை, நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

செப்.19 இல் எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா் உரை, கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், செப்.20 இல் கவிஞா் யுகபாரதி, எழுத்தாளா் ச. தமிழ்ச்செல்வன் ஆகியோரது உரையும், பள்ளி மாணவா்களின் நடன நிகழ்ச்சி, செப்.21இல் மதுரை எம்பி சு. வெங்கடேசன் உரையும், வீரயுக நாயகன் வேள்பாரி நாடகமும் நடைபெறும்.செப்.22இல், திரைப்பட இயக்குநா் கரு.பழனியப்பன் உரை, கலை பண்பாட்டுத் துறையின் கலை நிகழ்ச்சிகள், செப்.23இல் திருப்புகழ் ஐ.ஏ.எஸ் உரை, அரசு இசைப் பள்ளி மாணவா்களின் இசை கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.செப்.24இல் எழுத்தாளா் எஸ்.ராமகிருஷ்ணன் உரை, நாதசுரம் இசை கச்சேரி, செப். 25 இல் இளம்பகவத், ஐ.ஏ.எஸ் உரை, இசை அமைப்பாளா் ஜேம்ஸ் வசந்தன் சோ்ந்திசைப்போம் இசைக் கச்சேரியும் நடைபெறும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO