தேர் திருவிழாவில் கல்வீச்சு - பக்தர்கள் காயம் - வீடுகள் சேதம் - போலீசார் குவிப்பு

தேர் திருவிழாவில் கல்வீச்சு - பக்தர்கள் காயம் - வீடுகள் சேதம் - போலீசார் குவிப்பு

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள வரதராஜபுரம் கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா அண்மையில் காப்பு கட்டுதலுடன் தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.

திருவிழாவின் முக்கிய நிகழ்சியான திருத்தேர் திருவீதி உலா நடைபெற்றதில் ஒரு தரப்பை சேர்ந்த மக்கள் திருவிழாவில் பங்கேற்கவில்லை எனவும், அவ்வழியாக தேரினை கொண்டு செல்லக்கூடாது என கூறப்படுகிறது.

பின்னர் தகராறில் ஈடுபட்டதாகவும், இது குறித்து தகவலறிந்த தொட்டியம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவயிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தி தேரினை எடுத்து செல்வது தொடர்பாக வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். 

பின்னர் திருவிழா நடத்தலாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள் திருத்தேரினை இழுத்து சென்றபோது திடீரென தேரினை இழுத்து சென்றவர்கள் மீதும், அப்பகுதியில் உள்ள வீடுகள் மீதும், ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் கற்களை வீசியதில் தேரை இழுத்து சென்ற பக்தர்கள் மீது விழுந்ததில் 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்து தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இத்தகவல் பெற்ற தொட்டியம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவயிடம் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது திடீரென பாதிக்கப்பட்ட ஒரு தரப்பை சேர்ந்த மக்கள் திருச்சி - சேலம் புறவழிச்சாலையில் சாலை மறியல் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சாலை மறியல் முயற்சியில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர். இச்சம்பவங்கள் குறித்து தகவல் பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் மற்றும் முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் யாஸ்மின் நிகழ்விடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து எஸ்.பி உத்தரவின் பேரில் டி.எஸ்.பி மேற்பார்வையில் ஆய்வாளர்கள் முத்தையன் (தொட்டியம்) செந்தில்குமார் (முசிறி) ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் வரதராஜபுரம் கிராமத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn