அமைச்சர் தொகுதியில் இப்படி ஒரு நிலைமை - கண்டுகொள்ளாத திமுக கவுன்சிலர்கள்

அமைச்சர் தொகுதியில் இப்படி ஒரு நிலைமை - கண்டுகொள்ளாத திமுக கவுன்சிலர்கள்

திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்பொழுது நகராட்சி நிர்வாக துறை அமைச்சராக பதவி வைத்து வருகிறார்.

இந்த மேற்கு தொகுதிக்கு உட்பட்ட கருமண்டபம், பெரிய மிளகு பாறை பகுதியில் மக்களின் அடிப்படை கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் கிடப்பிலேயே உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

இதில் சாலை மற்றும் சாக்கடை பிரச்சனைகள் மிக நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் இருந்து வருகிறது. இது குறித்து வார்டுக்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்களிடம் அப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் கண்டும் காணாதது போல் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்பொழுது மாநகராட்சி வார்டுக்குட்பட்ட 54 வது வார்டு செல்வ நகரில் நீண்ட காலமாக சாக்கடை பிரச்சனை இருந்து வருகிறது.

விவசாய பாசனத்திற்கு பயன்பட்டு வந்த வாய்க்கால் தற்பொழுது சாக்கடையாக மாறி உள்ளது. இதில் சாக்கடை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனால் சாக்கடை நீர் குடியிருப்புக்குள் செல்லும் நிலை உள்ளது. இந்த சாக்கடை 54 மற்றும் 55 வது வார்டு நடுவில் உள்ளதால் இரண்டு கவுன்சிலர்களிடம் இது குறித்த புகார் தெரிவித்தால் இது என்னுடைய கட்டுப்பாட்டில் வராது என்று அலட்சியம் காட்டி வருகின்றனர்.

மழை காலங்களில் சாக்கடை நீர் ஆறு போல தெருக்களில் செல்வதால் விஷ பூச்சிகள், தொற்றுநோய் பரவும் சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை உடல் நிலை அடிக்கடி பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டத்திற்கு மாற்றத்தை ஏற்படுத்தும் வகைகள் செயல்படுத்தி வரும் தமிழ்நாட்டின் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவரது தொகுதியில் நீண்ட வருடங்களாக இருக்கும் இந்த பாதாள சாக்கடை திட்டத்திற்கு கவனம் செலுத்துவாரா? இதற்கு திமுக மாமன்ற உறுப்பினர்கள் இதனை சரி செய்ய முன் வருவார்களா என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn