டிசிஎஸ் : வீட்டிலிருந்து வேலைக்கு குட்பை ... அனைவரும் அலுவலகத்துக்கு வாங்க !!
நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) கோவிட்தொற்றுநோய்களின் பொழுது தொடங்கப்பட்ட ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ (WFH) முறையை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. இதனுடன், அதன் 6.14 லட்சம் ஊழியர்களும் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கோவிட் தொற்றுநோய்க்குப்பிறகு இத்தகைய நடவடிக்கையை எடுத்த முதல் பெரிய ஐடி நிறுவனம் டிசிஎஸ் என்பது குறிப்பிடத்தக்கது. டிசிஎஸ் எச்ஆர் தலைவர் மிலிந்த் லக்காட் கூறுகையில், அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்வது உற்பத்தித்திறனை அதிகரிக்கும் என்று நிறுவனம் நம்புகிறது. எனவே ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
'புதிய பணியாளர்கள் TCSன் பெரிய பணியாளர்களுடன் ஒருங்கிணைக்கப்படுவதற்கு அவர்கள் வேலைக்கு வர வேண்டும் என்று நாங்கள் திடமாக நம்புகிறோம். TCSன் மதிப்புகள் மற்றும் வழிமுறைகளை அவர்கள் கற்றுக்கொள்ளவும் புரிந்துகொள்வது மற்றும் உள்வாங்கிக்கொள்வதும் இதுதான் ஒரே வழி. எனவே வாரத்தின் அனைத்து நாட்களிலும் பணியாளர்களை அலுவலத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்கிறோம். கடந்த மூன்று ஆண்டுகளில் நிறுவனம் பல புதிய பணியாளர்களை நியமித்துள்ளது என்றார். எனவே, அனைத்து ஊழியர்களுக்கும் சமமான மதிப்புகள் இருப்பது முக்கியம் என்றார்.
2025ம் ஆண்டுக்குள் நிறுவனத்தில் இருப்பவர்களின் எண்ணிக்கையை 25 சதவிகிதம் குறைக்க இருப்பதற்கான கேள்விக்கு பதிலளித்தவர், 'இதை எங்களால் இப்பொழுது கூற முடியாது' என்று கூறினார். கடந்த மூன்று ஆண்டுகளில் உயர்மட்ட நியமனங்கள் மற்றும் பணிநீக்கங்கள் காரணமாக, ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அதன் சிஓஓ கூறினார். 70 சதவிகித ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர் என்றார்.
இஸ்ரேலில் டிசிஎஸ் நிறுவனத்தின் 250 ஊழியர்கள் உள்ளனர் என்பது கூடுதல் தகவல். டிசிஎஸ் நிறுவனம் இஸ்ரேலில் 250 பணியாளர்களைக் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் மோதல்கள் அதன் வர்த்தகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
அனைத்து ஊழியர்களுடனும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அவர்களின் பாதுகாப்பில் எங்களின் முக்கிய கவனம் இருப்பதாகவும் கூறினார். நிறுவனம் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் ரூபாய் .11,342 கோடியாக அதிகரித்துள்ளது. நடப்பு 2023-24 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் நிகர லாபம் ஆண்டு அடிப்படையில் 8.7 சதவிகிதம் அதிகரித்து ரூபாய் 11,342 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் டிசிஎஸ் ரூபாய் 10,431 கோடி நிகர லாபம் ஈட்டி இருந்தது. நிறுவனத்தின் செயல்பாட்டு வருமானம் ஆண்டுக்கு ஆண்டு 7.9 சதவீதம் அதிகரித்து, ரூபாய் 59,692 கோடியாக உயர்ந்துள்ளது, இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூபாய் 55,309 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.