தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாகக் குழு மற்றும் மாநில பிரதிநிதிகள் சிறப்புப் பேரவைக் கூட்டம்

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாகக் குழு மற்றும் மாநில பிரதிநிதிகள் சிறப்புப் பேரவைக் கூட்டம்

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாகக் குழு மற்றும் மாநில பிரதிநிதிகள் சிறப்புப் பேரவைக் கூட்டம் 2024 டிசம்பர் 30 மற்றும் 31 தேதிகளில் திருச்சி, உறையூர், ஜவுளி உற்பத்தியாளர் திருமண மண்டபத்தில் மாநிலத் தலைவர் தோழர் கே.இரவி தலைமையில் நடைபெற்றது. 

டிசம்பர் 30-ல் நடைபெற்ற மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தை தமிழ்நாடு ஏஐடியூசி பொதுச் செயலாளர் தோழர் எம்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். டிசம்பர் 31அன்று மாநில பிரதிநிதிகள் சிறப்புப் பேரவை கூட்டத்தை சங்கத்தின் மாநிலத் தலைவரும், அகில இந்திய கட்டட, கட்டுமானத் தொழிலாளர்கள் மகா சம்மேளனத்தின் தலைவருமான தோழர் கே.இரவி துவக்கி வைத்தார். மாநில நிர்வாகிகள் எம்.முனுசாமி, இரா.முருகன், ஆர் துரைசாமி, மாமன்ற உறுப்பினர் கே சுரேஷ், ஆர்.பாலகிருஷ்ணன், ஜிபிஎஸ் வடிவேலன், எஸ்.கவிதா, எஸ்.சேது, எஸ்.சின்னசாமி, ஜி.பாலன், ஆர்.தில்லைவனம், சி.நந்தினி, ஏ.எஸ்.சங்கர் மேஸ்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 38 மாவட்டங்களில் இருந்து, கட்டுமானத் தொழிலாளர்களால் தேர்வு செய்யப்பட்ட 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

மாநில பொதுச் செயலாளர் என்.செல்வராஜ் செயல்பாட்டு அறிக்கை முன் வைத்தார், துணைப் பொதுச் செயலாளர் எம்.முனுசாமி சங்கத்தின் துணை விதிகளில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பான தீர்மானங்களை முன்வைத்தார். மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளின் கருத்துரைக்கு பிறகு அறிக்கைகள் ஏக மனதாக ஏற்கப்பட்டன. ஏஐடியுசி யின் தேசிய துணைத் தலைவரும், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் கே.சுப்பராயன் எம்.பி. பிரதிநிதிகள் சிறப்பு பேரவை கூட்டத்தை நிறைவு செய்து சிறப்புரையாற்றினார். சங்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் சி‌செல்வகுமார் நன்றி தெரிவித்தார். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1) பொங்கல் போனஸ் வழங்குக! நலத்திட்ட உதவித் தொகைகளை உயர்த்தி வழங்கக் கோருதல் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் ஆறாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதியிருப்பு உள்ளது.‌ ஆகவே, நலவாரியத்தில் பதிவு செய்துள்ள‌ அனைத்து கட்டட, கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.‌ ஆனால் போனஸ் வழங்கப்படாதது‌ தொழிலாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் பல வருடங்களாக தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.

ஆகவே, வரும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட, அனைத்து கட்டட, கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் பொங்கல் போனஸாக (ஊக்கத்தொகை) தலா ரூ.5000/- வழங்க வேண்டும். மேலும், அனைத்து நலத் திட்ட உதவித் தொகைகளையும் செலவினங்களுக்கு ஏற்ப உயர்த்தி வழங்க வேண்டும் என‌றும், கட்டுமான மதிப்பீட்டில் வசூலிக்கப்படும் நலவரியை 1% விருந்து 5% ஆக உயர்த்த வேண்டும் என்றும் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் மாநில சிறப்பு பேரவை தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.

2) கடந்த 2017/ 2022க்கு உட்பட்ட ஐந்தாண்டுகளில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் 19 லட்சம் பதிவு பெற்ற தொழிலாளர்களின் பதிவுகள் புதுப்பிக்கப்படாமல் விடுபட்டுப் போய்விட்டது, சென்னை மாநகராட்சி கட்டுமான தொழிலாளர் நல வாரியத்திற்கு செலுத்த வேண்டிய 200 கோடி ரூபாய்களை செலுத்தாமல் இருக்கிறது, உள்ளாட்சி அமைப்புகள் நல வரி வசூலித்து செலுத்தாமல் சொந்த செலவுகளை செய்து கொள்கிறது, கட்டிடம் கட்டுவோர் வாரியத்திற்கு கட்ட வேண்டிய நல வரி கட்டுவதை ஏமாற்ற திட்ட மதிப்பை குறைத்து காட்டுகிறார், வாரியத்திற்கு 13 கோடி ரூபாய் மதிப்பிலான வரைவோலைகள் மூலம் வசூலிக்கப்பட்ட தொகை வங்கியில் செலுத்தப்படாமல் மோசடி செய்யப்பட்டுள்ளது, காலம் முறைப்படி வாரியம் கூட்டப்படுவதில்லை,

கோடிக்கணக்கான ரூபாய்களை கட்டுமான வாரிய நிர்வாகம் விரயம் செய்கிறது, பல ஆண்டுகளாக ஓய்வூதியம் உயர்த்த வேண்டும் என்று தொழிலாளர் பிரதிநிதிகள் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை என்பது உள்ளிட்ட ஏராளமான மோசடிகளை குறைகளை அம்பலப்படுத்தும் வகையில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய செயல்பாடு குறித்து இந்திய தணிக்கை துறை அறிக்கை 2024 அறிக்கை எண் 3 தெரிவிக்கிறது. இது குறித்து விவாதிப்பதற்காக கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று ஏ ஐ டி யு சி யின் கட்டட தொழிலாளர் சிறப்பு பேரவைக்கூட்டம் தமிழ்நாடு அரசை. கேட்டுக் கொள்கிறது.

3) சொந்த வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு பத்தாயிரம் வீடுகள் அடுக்குமாடி குடியிருப்பு அல்லது வீடு கட்ட ரூபாய் 4 லட்சம் உதவி வழங்கப்படும் திட்டம் திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்றவுடன் அறிவிக்கப்பட்டது. அந்தத் திட்டத்தின் படி இதனால் வரை 40,000 கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடுகள் வழங்கி இருக்க வேண்டும். விண்ணப்பிப்பதில் ஏராளமான இடையூறுகளை அதிகாரிகள் விதித்ததால் நான்கு ஆண்டுகளில் 300 வீடுகள் கூட வழங்கப்படவில்லை. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இது விஷயத்தில் அவசரமாக தலையிட்டு உடனடியாக 40,000 கட்டுமான தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டபடி வீடுகள் வழங்கப்பட வேண்டும் என்று ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் பேரவை கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

4) தமிழ்நாட்டில் கடந்த வாரங்களில் கட்டுமான பொருட்கள் குறிப்பாக ஜல்லி மற்றும் எம் சேன்டு 40 சதவீதம் வரை கடுமையாக விலை உயர்வை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் வீடு கட்டுவது கட்டிடம் கட்டுவது தடைப்பட்டு போய் உள்ளது. சிறு ஒப்பந்ததாரர்கள் கட்டுனர்கள் சிறு மேஸ்திரிகள் தொழிலாளர்கள் கடுமையாக வேலை இழப்பை சந்தித்து வருகிறார்கள். 

உடனடியாக தமிழக அரசு எது தலையிட்டு சம்பந்தப்பட்டவர்களை அழைத்து எந்த வித நியாயமான காரணங்களும் இல்லாமல் உயர்த்தப்பட்ட விலைகளை உடனடியாக குறைத்து. கட்டுமான தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்த்து வைக்குமாறு தமிழ்நாடு அரசை ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் பேரவை கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

5) நாடு முழுவதும் உள்ள கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் வசூலிக்கப்பட்ட நல நிதியை மத்திய சட்டத்தின்படி ஒன்றிய அரசு கையகப்படுத்தியதால் அறிவிக்கப்பட்ட திட்ட பலன்கள் கிடைக்காமல் கட்டுமான தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கேரள மாநிலத்தில் 14 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. ஆந்திர மாநிலத்தில் நலவாரியம் செயல்படுத்தப்படாமல் முடக்கப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் 36,000 கோடி ரூபாய்கள் மாநில அரசால் தவறுதலாக கைப்பற்றப்பட்டு விட்டது. கர்நாடக மாநிலத்தில் நலத்திட்டங்கள் வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் அந்தந்த மாநிலங்களில் வசூலிக்கப்படும் நல நிதிகள் அந்தந்த மாநில நல வாரியங்கள் மூலம் கட்டுமான தொழிலாளர் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு தன்னாட்சி கொண்ட அதிகாரம் வழங்கி சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என்றும். கட்டிடம் கட்டுவோரிடம் வசூலிக்கப்படும் ஒரு சத நல்லா வரியை இரண்டு சதமாக உயர்த்தவும், ஓய்வூதிய தொகையை 6 ஆயிரம் ரூபாய் என்று நிர்ணயிக்கவும், நாடு முழுவதும் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு இ எஸ் ஐ திட்டத்தை அமல்படுத்தும் வகையில் சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என்று கேட்கும், 44 தொழிலாளர் சட்டங்களை நான்கு தொகுப்புகளாக மாற்றியதை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் 2025 பட்ஜெட் கூட்டத் தொடரின் போது நாடாளுமன்றத்தின் முன்பாக போராட்டம் நடத்துவதற்காக ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் டெல்லி தலைமையின் அழைப்பை ஏற்று,டெல்லிக்கு போகலாம் என்கிற போராட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து ஐந்தாயிரம் கட்டுமான தொழிலாளர்கள் பங்கேற்பது என்றும் கூட்டத்தில் ஒரு மனதாக முடிவுகள் செய்யப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision