திருச்சி காவல்துறையினருடன் இணைந்த தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர்!!
திருச்சி மாநகரத்தில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக சமூக விலகலை கடைபிடிக்க மார்ச் 21ம் தேதியிலிருந்து 21 நாட்களுக்கு மக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளின்றி, வேறு எந்த காரணத்திற்காகவும் வெளியே வரக்கூடாது என்று கடந்த மாதம் 23ம் தேதி ஊறடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும் பொருட்டு, அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து பிற நடமாட்டங்களை குறைக்கும் வகையில் திருச்சி மாநகர காவல் துறையினர் நகரம் முழுவதும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் சமூக விலகல் நடைமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா நோய் தொற்று, தடுப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக கடந்த 29ம் தேதியிலிருந்து 1 உதவி ஆய்வாளர் மற்றும் 40 காவல் ஆளிநர்கள் அடங்கிய தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு திருச்சி மாநகரம் வந்துள்ளனர். தற்போது இக்குழுவினர் திருச்சி மாநகர காவல்துறையினருடன் சேர்ந்து கோட்டை, காந்தி மார்க்கெட், பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க விழிப்புணர்வு பணியிலும், சமூக விலகல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவசர காலங்களில் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.