பொய் சொல்கிறார் முதல்வர்... பொன்.மாணிக்கவேல் பொளேர் !!
"தமிழகத்தில் உள்ள கோயில்களை அம்மாநில அரசுகள் ஆக்கிரமித்துள்ளது. கோயில்களை அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அநீதியானது. ஆனால், சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் மீது அவர்கள் கை வைப்பதே இல்லை அவற்றை அரசு கொள்கைகளுக்கும் கொண்டு வரமாட்டார்கள்" என்று பிரதமர் மோடி கூறிய தற்கு, பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று முன்தினம் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் ரூபாய் 3,500 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தியிருக்கிறோம். ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க 112 திருக்கோயில்களை பழமை மாறாமல் சீரமைக்க ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிதியாண்டில் 5,078 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இவை எல்லாம் தவறா? எதை தவறு என்கிறார் பிரதமர் மோடி?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், திருப்பூர் கூலிபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோயிலில் நேற்று சாமி தரிசனம் செய்த, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன் னாள் ஐஜி பொன். மாணிக்க வேல், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது... தமிழகத்தில் கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்படுவது அதிகரித்துள்ளது. கோயில் வருமானத்தில், அவற்றை புனரமைக்க முடியாத நிலையுள்ளது. தமிழக கோயில்களுக்கு 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளதாக ஆவணங்களில் உள்ளது. இவற்றில் 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மட்டுமே அரசு கையகப்படுத்தியுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகிறார்.
இதற்காக அவரை பாராட்டுகின்றனர். கையகப்படுத்தப்பட்டது. மொத்த நிலத்தில் 3.7 சதவீதம் மட்டுமே. இப்போது, ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை அரசு கண்டுகொள்ளவில்லை. இதில், திமுக, அதிமுக அரசுகளுக்கு மத்தியில் எந்த வேறுபாடும் இல்லை. கோயில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக பிரதமர் மோடி ஒரு கருத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த கருத்தை முதல்வர் ஸ்டாலின் மறுப்பார் என்றால், அறநிலையத்துறை கோயில்கள், நிலங்கள் பிரச்னையில் முதல்வர் ஸ்டாலின் சொல்வது பொய். கோயில் நிலங்கள் தொடர்பாக பிரதமர் கூறுவதுபொய் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினால், அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும்.
கோயில் நிலங்களை அரசு பயன்பாட்டுக்கு கொண்டு வரும் அரசு நிர்வாகம், பிற மதங்களின் நிலங்களை கையகப்படுத்துவதில்லை. என் பணியில் நேர்மையாக இருந்தேன். இனி கோயில்கள் மீது கவனம் செலுத்த உள்ளேன். இனியும் பேசாமல் இருந்தால், கோயில்களே இல்லாமல் செய்து விடுவார்கள். நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாகவும் செயல்படுவதும் இல்லை. கோயில் இடங்கள், கோயில்கள் தவறாக கையகப்படுத்துவது தெரிந்தால் கண்டிப்பாக குரல் கொடுப்பேன். முதல்வர் சொல்வது உண்மை என்றால், என்னுடன் விவாதம் நடத்த தயாரா ? இவ்வாறு அவர் கூறினார்.