மகனை கொன்றவர்களை பழி தீர்க்க 10 லட்சம் கேட்ட கூலிப்படையினருக்காக ஆடு, நகை திருடிய தந்தை

மகனை கொன்றவர்களை பழி தீர்க்க 10 லட்சம் கேட்ட கூலிப்படையினருக்காக ஆடு, நகை திருடிய தந்தை

திருச்சி மாவட்டம் முசிரி அருகே மணலி அயித்தாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அன்னலட்சுமி (70). இவரது வீட்டில் மர்ம நபர் ஒருவர் நேற்று முன் தினம் இரவு உள்ளே புகுந்துள்ளார். சத்தம் கேட்டு எழுந்த அன்னலட்சுமி வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் நிற்பதை பார்த்து சத்தம் போட்டு உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மர்ம நபர் வீட்டிற்கு வெளியே நிறுத்தி இருந்த பைக்கை எடுத்துக்கொண்டு தப்பித்து செல்ல முயன்றுள்ளார். அப்போது கீழே விழுந்ததில் பைக்கை விட்டுவிட்டு மர்ம நபர் தப்பியுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த முசிரி போலீசார் பைக்கை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் முசிரி அருகே பெரிய கொடுந்துறை பகுதியில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் செந்தில்குமார் விசாரணை மேற்கொண்ட போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்ட போது முசிரி பெரிய கொடுந்துறையை சேர்ந்த முத்துச்செல்வம் என்பதும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்தது.

போலீசார் விசாரித்தபோது சில வருடங்களுக்கு முன்பு தனது மகனை கொன்றவர்களை பழி வாங்குவதற்காக கூலிப்படை உதவியை நாடியதாகவும், அவர்கள் பத்து லட்சம் ரூபாய் பணம் கேட்டதாகவும், கூலிப்படைக்கு 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து தன் மகனை கொன்றவர்களை கொன்று பழிதீர்க்க தொடர் திருட்டில் ஈடுபட்டதாகவும் முத்துச்செல்வம் போலீசாரிடம் தெரிவித்தார். இதனை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். முசிரி அருகே உள்ள திருஈங்கோய்மலை பின்புறம் இருந்த கொட்டகை ஒன்றில் முத்துச்செல்வம் திருடி மறைத்து வைத்திருந்த பொருட்களை மீட்டனர். கண்ணனூர் பாளையத்தைச் சேர்ந்த முத்து என்பவரின் மூன்று ஆடுகள், குருவம்பட்டியைச் சேர்ந்த சிங்காரம் என்பவரின் 3 வெள்ளாடுகள், மாராய்ச்சிபட்டியை சேர்ந்த சுப்பிரமணியனின் இரண்டு ஆடுகள்,

கலிங்கமுடையான் பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் இரண்டு வெள்ளாடுகள், மகேந்திர மங்கலத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான ஒரு பவுன் தங்க நகை, மேல கொட்டத்தைச் சேர்ந்த ஆச்சி என்பவரின் இரண்டு பவுன் தங்கச் செயின், கட்டனாம் பட்டியை சேர்ந்த குமாரத்தி என்பவரின் ஒண்ணே கால் பவுன் மதிப்புள்ள தங்க நகை ஆகியவற்றை போலீசார் முத்துசெல்வத்திடம் இருந்து மீட்டனர். 10 ஆடுகள் நாலேகால் பவுன் தங்க நகைகளும் மீட்கப்பட்டது. இதையடுத்து போலீசார் முத்துச்செல்வம் மீது வழக்கு பதிந்து கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மகனை கொன்றவர்களை பழிதீர்க்க தொடர் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn