பெண்ணை தாக்கி தங்க சங்கிலியை பறித்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் சரித்திரபதிவேடு குற்றவாளிகள், வழிப்பறி செய்யும் குற்றவாளிகள், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
கடந்த (30.01.23)-ந் தேதி பொன்மலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அம்பேத்கர்நகர் அரசமரம் வாட்டர் டேங்க் அருகில் நடந்து சென்ற பெண் ஒருவரை தாக்கி 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் எதிரி வெங்கடேஷ் 27/23 த.பெ.பாலமுருகன் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணையில் எதிரி வெங்கடேஷ் மீது திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூர் காவல்நிலைய பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து, நடந்து சென்ற பெண் ஒருவரிடம் 3 பவுன் தங்க செயினையும், நடந்து சென்ற கல்லூரி மாணவர் ஒருவர் அணிந்த 1 பவுன் தங்க செயினையும் மற்றும் நவல்பட்டு காவல்நிலைய பகுதியில் நடந்து சென்ற பெண் ஒருவரிடம் 3 பவுன் தங்க செயினையும் பறித்து சென்றதாக 3 வழக்குகளும்,
திருச்சி மாநகரத்தில் பொன்மலை காவல் நிலைய பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் 2 பவுன் தங்க செயினை பறித்ததாக ஒரு வழக்கும், அரியமங்கலம் காவல் நிலைய பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் செயினை பறிக்க முயற்சி செய்ததாக ஒரு வழக்கு உட்பட 5 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.
எனவே எதிரி வெங்கடேஷ் திருச்சி மாநகர் மற்றும் மாவட்டங்களில் இருசக்கர வாகனத்தில் வந்து தங்க செயினை பறிப்பது மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர் என விசாரணையில் தெரிய வருவதால், மேற்படி எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு பொன்மலை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த
காவல் ஆணையர் சத்திய பிரியா மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரி மீது குண்டர் தடுப்பு ஆணையினை சார்பு செய்தும் மேற்படி எதிரி சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்று குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.