நால்ரோடு பகுதியில் அடுத்தடுத்து கொலை, கொள்ளை - தொடர் குற்ற சம்பவங்களால் அச்சத்தில் பொதுமக்கள்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உலக புகழ்பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவில் உள்ளது. வருடத்தில் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் பாதயாத்திரை ஆகவும் வாகனங்களிலும் வந்த வண்ணம் உள்ளனர். சமயபுரம் நால்ரோடு பகுதியில் மிகவும் பரபரப்பாக காணப்படும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை செல்வதற்கும் மண்ணச்சநல்லூர் பகுதி செல்வதற்கும் வழியாகவும் கடைகள் நிறைந்த பகுதியாக எப்பொழுதும் பரபரப்பாக காணப்படுகிறது.
இந்த சமயபுரம் நான்கு ரோடு பகுதியில் நான்கு மதுபான கடைகள் இருந்தன. குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு இரண்டு மதுபான கடைகள் அங்கிருந்து அகற்றப்பட்டன. சமயபுரம் நால்ரோடு பகுதியில் அருகருகே 2 டாஸ்மாக் மதுபான கடை அமைந்துள்ளது. இந்த டாஸ்மாக் மதுபானக்கடை பார்களில் உரிய நேரங்களை தாண்டி 24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக இந்த மதுபான கடை அருகே உள்ள சிமெண்ட் கடை ஒன்றின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் கடையில் இரந்த ரூ.35 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆட்டோ டிரைவர்களான அஜீத், விஜய் ஆகியோர் அதிகாலை 3.30 மணி அளவில் இங்குள்ள டாஸ்மாக் பார்களில், கள்ளச்சந்தையில் விற்கப்படும் மது பானத்தை வாங்கி அங்கேயே நின்று குடித்த போது தகராறு ஏற்பட்டது. இதில் பாட்டிலால் தாக்கப்பட்டு விஜய் என்பவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் இன்று காலை அங்குள்ள ஒரு மெக்கானிக் கடை, ஹார்டுவேர் கடை, பலசரக்கு கடை, குடோன் ஆகியவற்றின் பூட்டை உடைக்கப்பட்டிருப்பதை கண்ட சிலர் இது குறித்து சமயபுரம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த சமயபுரம் போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 டாஸ்மாக் பார்களில் விற்பனை நேரத்திற்கும் மேலாக கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவதால், தொடர்ந்து பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் வலயுறுத்துகின்றனர்.
இந்த மதுபான கடை முன்பு மட்டும் கடந்த இரண்டு வருடங்களில் மூன்று கொலைகள் நடந்திருப்பதும் பல்வேறு அடிதடி பிரச்சினைகள் நடந்தேறி வருவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த மதுபான கடைகள் மூலமாக பொதுமக்களும் அங்கு உள்ள வியாபாரிகளும் தொடர் அச்சத்தை எதிர் நோக்கியே இருந்து வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision