பிறந்த நாளை கொண்டாடிய திருவாணைகாவல் யானை அகிலா

பிறந்த நாளை கொண்டாடிய திருவாணைகாவல் யானை அகிலா

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்குவதும், கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்டதுமான திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருத்தலத்தில் யானை முக்கிய பங்காற்றுகிறது. ஒவ்வொரு கால பூஜையிலும் கோவில் யானை அகிலா மூலம் புனிதநீர் எடுத்து வரப்பட்டு அபிஷேகம் செய்யப்படுவது மற்றும் யானை அகிலாவும் முக்கிய பங்காற்றுகிறது.

அந்த வகையில் கடந்த 2002ல் பிறந்த அகிலா யானையானது கடந்த 2011ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது திருக்கோவில் பூஜைகள் மற்றும் திருப்பணிக்காக திருவாணைக்காவல் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அகிலாவிற்கு 19 வயது நிறைவுபெற்று இன்று 20-வது வயதை எட்டும் நிலையில் திருக்கோவில் சார்பில் யானைக்கு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

கோவில் யானை தங்குமிடத்தில் இருந்து யானை அகிலா எழிலுடன் அலங்கரிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டு பின்னர் திருக்கோவில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் முன்னிலையில் யானைக்கு கஜபூஜைகள் நடத்தப்பட்டு யானை பாகன்கள், அர்ச்சகர்கள், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பலரும் பங்கேற்று யானை அகிலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துப் பாடினர்.

பின்னர் பழங்கள், காய்கறிகள், கடலை மிட்டாய்,  கொழுக்கட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கி யானையை மகிழ்வித்தனர். யானையும் பக்தர்கள் மற்றும் பலரது வாழ்த்துக்களை சமமாக பெறும் வகையில் தும்பிக்கையை ஆட்டி தனது நன்றியைத் தெரிவித்தது அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. கோவில் யானைக்கு பிறந்தநாள் கொண்டாடிய நிகழ்ச்சியை கண்ட சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியோடு கண்டுகளித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO