திருச்சியில் வெறி பிடித்த தெரு நாய் கடித்து மூன்றரை வயது குழந்தை காயம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி

திருச்சியில் வெறி பிடித்த தெரு நாய் கடித்து மூன்றரை வயது குழந்தை காயம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெறி பிடித்த தெரு நாய்களால் கடிபட்டு பாதிக்கப்பட்டவர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தனர். தெரு நாய் எண்ணிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும், நாய்களை பிடித்து கருத்தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மேலும் திருச்சி உறையூர் கோணகரை பகுதியில் உள்ள நாய்கள் கருத்தடை மையத்தை செயல்பாட்டில் கொண்டு வர வேண்டுமென கோரிக்கை விடுத்ததை அடுத்து தற்போது நாய்களுக்கான கருத்தடை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் மாநகர் பகுதிகளில் குறிப்பாக பொதுமக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.

இதனால் பொதுமக்களும் பெரும் அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக இந்த தெரு நாய்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்க கூடிய சூழ்நிலை உருவாகிறது. இந்நிலையில் திருச்சி மலைக்கோட்டை அருகே உள்ள பெரியசௌராஷ்டிரா தெருவை சேர்ந்த பாண்டி என்பவரின் மூன்றரை வயது மகள் சிவன்யா வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது வெறிநாய் கடித்து குதறி உள்ளது.

இதனால் குழந்தையின் நெற்றி, மூக்கு, கண்ணம் பகுதியில் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் உடனடியாக சிவன்யா திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். குழந்தையை வெறி பிடித்த தெரு நாய் கடித்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

குழந்தையை நாய் கடித்தது குறித்து  தகவலறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள் அந்த நாயை பிடித்து சென்றனர். தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn