ஓடும் பேருந்தில் தாலி செயின் பறிப்பு -ஆந்திரா பெண்கள் உட்பட மூன்று பேர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சீத்தப்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் மனைவி மகேஸ்வரி (22). இவர் தனது குழந்தைக்கு சிகிச்சைக்காக விராலிமலை - மணப்பாறை செல்லும் அரசு பேருந்தில் சித்தகுடிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் ஏறி பயணித்துள்ளார். பேருந்து மணப்பாறைக்கு முன்னதாக வடக்கிப்பட்டி பகுதியில் சென்றுக்கொண்டிருந்தபோது மகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை சவரன் நகை கொண்ட தாலியை காணவில்லை.
இதனால் பதற்றமடைந்த மகேஸ்வரி பேருந்திலிருந்து இறங்கியுள்ளார். அப்போது அவருடன் இறங்கிய மூன்று பெண்கள், மகேஸ்வரிக்கு பின்னால் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்ததாக சகாபயணிகள் கூறியதையடுத்து, பொதுமக்கள் அந்த மூன்று பெண்களையும் பிடித்து விசாரித்ததில் தாலியை திருடியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற காவல் உதவி ஆய்வாளர் பிரதீப் தலைமையிலான போலீஸார் மூன்று பெண்களையும் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் மணப்பாறை அடுத்த சின்னசமுத்திரம் மணிகண்டன் மனைவி அர்ச்சனா (28), ஆந்திரா மாநிலம் சித்தூர் சந்தைமேட்டு தெருவை சேர்ந்த ராமதாஸ் மனைவி காமாட்சி (40),
நடராஜன் மனைவி அலமேலுமங்கம்மாள் (40) என்பதும், தாலிகொடியை பறித்ததும் தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து தாலிக்கொடியினை பறிமுதல் செய்த மணப்பாறை போலீஸார் வழக்கு பதிந்து மூவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision