திருச்சி அரசு மருத்துவமனையில் தூய்மை இயக்க பணிகளை ஆய்வு செய்த முதல்வர்

திருச்சி அரசு மருத்துவமனையில்   தூய்மை இயக்க பணிகளை  ஆய்வு செய்த  முதல்வர்

ஏப்ரல் 1 முதல் 30-ஆம் தேதி வரை தமிழக அரசின் மருத்துவமனை தூய்மை இயக்கம் "நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை"என்று தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, திருச்சி மகாத்மா காந்தி அரசு நினைவு மருத்துவமனையிலும் இந்த மருத்துவமனை தூய்மை இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. தூய்மை பணிகளை இன்று ஆய்வு செய்த மருத்துவமனை முதல்வர் மருத்துவர். K. வனிதா தெரிவித்ததாவது: 165 ஆண்டுகள் பெருமை வாய்ந்த திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை திருச்சி மக்களுக்கு மட்டுமல்லாமல் அருகாமையில் உள்ள பல்வேறு மாவட்ட மக்களுக்கும் உயர் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3,500 நபர்கள் புறநோயாளிகளாகும் ,1,700 நபர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று பயன் பெறுகின்றனர்.

மேலும் 40 முதல் 50 குழந்தைப் பிறப்புகள் நிகழ்கின்றன. இவ்வாறு அரசு மருத்துவமனையின் மருத்துவ சேவைகளை பெறுவதற்கு வரும் பல்லாயிரக்கணக்கான பயனாளிகள் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை குறித்த மதிப்பீடுகள் சிறப்பாக அமையவும் மருத்துவமனை தூய்மையுடனும் முறையான பராமரிப்புகளுடனும் மற்றும் இயற்கை அழகுடன் கூடிய பின்னணியில் செயல்படுவது அவசியம் ஆகிறது.

இம்மருத்துவமனையில் உள் நோயாளி பிரிவு, புறநோயாளி பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு என பல்வேறு மருத்துவ சிகிச்சை பிரிவுகள் தொற்று பரவும் தன்மையைப் பொருத்து அதிகமாக தொற்று பரவ வாய்ப்பு உள்ள பகுதிகள், மிதமாக தொற்று பரவ வாய்ப்பு உள்ள பகுதிகள், மிகக்குறைவான அளவில் தொற்று பரவ வாய்ப்பு உள்ள பகுதிகள் என வகைப்படுத்தப்பட்டு அதற்கு உரிய தனித்தன்மையுடன் நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்கான வழிமுறைகள் கண்டறியப்பட்டு பராமரிக்கப்படுகிறது. எனவே இப் பிரிவுகளில் மருத்துவமனையில் சுத்தம் செய்யும் முறை அதிகம் தொற்று பரவ வாய்ப்பு உள்ள பகுதிகளில் அடிக்கடியும் மிதமான வாய்ப்புள்ள இடங்களில் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையும் குறைவான வாய்ப்புள்ள பகுதிகளில் மூன்று முறையும் என தேவையின் அளவின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவமனையில் நோய்த்தொற்றை அதிகப்படுத்தும் பூச்சிகள், எலிகள், சுற்றித் திரியும் விலங்குகள், கொசுக்கள் ஆகியவற்றையும் கட்டுப்படுத்துவது முக்கிய நடவடிக்கையாகும். மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை சுத்தத்துடனும் சுகாதாரத்துடன் தினம்தோறும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இப்பணியை மேலும் வலுப்படுத்த பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் மின்சாரம், மாநகராட்சி போன்ற பிற துறைகளின் உதவியுடன் மருத்துவமனை வளாகத்தினை தூய்மைப்படுத்தவும் பராமரிக்கவும் "நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை" என்ற குறிக்கோளுடன் கூடிய இப்பணி ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை செயல்படுத்தப்படுகிறது. மேலும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என இந்த மருத்துவமனை தூய்மை இயக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஆண்டு முழுவதும் பராமரிக்கப்படும். இது தொடங்கப்பட்ட ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் நாள் முழுவதும் 300க்கும் மேற்பட்ட மருத்துவமனை பணியாளர்கள் இச்சேவையில் உட்படுத்தப்பட்டு 402 கழிவறைகள் சுத்தம் செய்து தூய்மை படுத்தப்பட்டுள்ளது. சுமார் 100 முதல் 150 கிலோ எடையுள்ள உயிர் மருத்துவ கழிவுகளை நெறிமுறைகளின்படி சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.

இதேபோல 1000 முதல் 1500 கிலோ உயிர் மருத்துவ கழிவுகள் அல்லாத கழிவுகள் தினமும் அகற்றப்பட்டுள்ளது.இவ்வாறாக மருத்துவமனையில் தொற்றுநோய்கள் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்வதும் சுற்றுச்சூழல் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு பசுமை மருத்துவமனை உருவாக்கிட பணிகளை மேற்கொள்வதும் நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் அனைவரும் பொதுமக்கள், தன்னார்வலர்கள் ஆகியோரோடு இணைந்து இலக்கினை அடைந்திட பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

மேலும் நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை இயக்கத்தின் ஓர் அங்கமாக மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் இளைப்பாறுவதற்காக சிறப்பு பூங்கா உருவாக்கப்பட உள்ளது. மேலும் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் அமர்ந்து சாப்பிடுவதற்கு உணவு உண்ணும் கூடம் குடிநீர் மற்றும் நாற்காலி வசதியுடன் உருவாக்கப்பட உள்ளது. நோயாளிகள் எளிமையாக தாங்கள் அணுகவேண்டிய மருத்துவப் பிரிவை தெரிந்து கொள்ளும் வகையில் வழிகாட்டும் பலகை தேவைக்கேற்ப அமைக்கப்பட உள்ளது. மருத்துவமனை வளாகத்தில் பிளாஸ்டிக்கை முற்றிலும் தவிர்க்கும் வகையில் மருத்துவமனை நுழைவாயிலில் பிளாஸ்டிக் பைகளை எடுத்து வர பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனைக்குள் பிளாஸ்டிக் பைகளை உணவு உண்டு அப்படியே விட்டுச் செல்வதால் அதனை தவிர்க்க உறவினர்கள் சாப்பிடுவதற்கு பிரத்யேகமாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு தொற்று ஏற்படுவதை தடுப்பதற்காக நிறைய எண்ணிக்கையில் நோயாளிகள் உடன் இருப்பவர்கள் இல்லாத வகையில் நெறிமுறை படுத்தப்படுகிறது. நோயாளிகளின் உறவினர்கள் நோயாளிகளை காலை 12 மணி முதல் 2 மணி வரையும் மாலை நேரத்தில் 4 மணி முதல் 6 மணி வரையும் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். கார் பைக் ஆகியவைகளை நிறுத்துவதற்கு பிரத்தியேகமாக வண்டி நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட உள்ளன. மருத்துவமனையில் ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் நிறுவப்பட உள்ளது. சானிட்டரி நாப்கின்களை போடுவதற்காக டிராம்கள் அமைக்கப்பட உள்ளன. நீண்ட நாட்களாக பயன்படுத்தப்பட்டு பழுதடைந்த கட்டில்கள் பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை அப்புறப்படுத்துவதற்காக 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு வாரத்திற்கு ஒருமுறை கலந்து ஆலோசித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பிளாஸ்டிக் தவிர்ப்போம் இயக்கமாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எங்கும் பசுமை எதிலும் பசுமை என்பதை வலியுறுத்தும் வகையில் நிழல் தரும் மரங்களை வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை பணியை சிறப்பாக செயல்படுத்திட மருத்துவமனை முதல்வர் தலைமையில் 30 நபர்கள் கொண்ட சிறப்பு குழு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. பொதுமக்களும் தன்னார்வலர்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தாமாக முன்வந்து நம் மருத்துவமனை-மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையை மகத்தான மருத்துவ மனையாக உருவாக்கிட தங்களின் பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்கிட வேண்டும் என்றார. இன்று மேற்கொண்ட தூய்மை பணிகள் ஆய்வின்போது மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர். E. அருண்ராஜ் , நிலைய மருத்துவ அலுவலர் மருத்துவர் சித்ரா திருவள்ளுவன் ஆகியோர் உடனிருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO